அமெரிக்கா: நெடுஞ்சாலை வடிகால் குழியில் விழுந்த குதிரை பத்திரமாக மீட்பு

'வின்ச்' எனப்படும் கனரக இழுவை இயந்திரத்தின் உதவியுடன் குதிரை மெதுவாக குழியிலிருந்து மேலே தூக்கி நிறுத்தப்பட்டது.
அமெரிக்கா: நெடுஞ்சாலை வடிகால் குழியில் விழுந்த குதிரை பத்திரமாக மீட்பு
குதிரை
Published on: 

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பிளானோ நகரில், நெடுஞ்சாலை ஓரம் இருந்த வடிகால் குழியில் தவறி விழுந்து தவித்த குதிரை ஒன்றை தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டுள்ளனர்.

விபத்து நடந்தது எப்படி?

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிளானோ நகரில், நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் வடிகால் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில், பிளானோ பகுதியில் உள்ள 121-வது நெடுஞ்சாலை ஓரமாக சில குதிரைகள் ஓடி வந்துள்ளன. அதில் ஒரு குதிரை திடீரென மிரண்டு, சாலையோரம் இருந்த ஆழமான கான்கிரீட் வடிகால் குழிக்குள் தவறி விழுந்தது. குழி குறுகலாக இருந்ததால் குதிரையால் சுயமாக வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பிளானோ தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் குதிரையை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். குதிரை மிகவும் ஆபத்தான நிலையில் கான்கிரீட் சுவர்களுக்கு இடையே சிக்கியிருந்ததால் மீட்புப்பணி சவாலாக இருந்தது.

மயக்க மருந்து செலுத்தி அதிரடி மீட்பு

மீட்புப் பணியின் போது குதிரை பயந்து துடிக்காமல் இருக்க, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவர் அதற்கு லேசான மயக்க மருந்து செலுத்தினார். அதன்பின், குதிரைக்கு காயம் ஏற்படாத வண்ணம், தீயணைப்பு வீரர்கள் தடிமனான தீயணைப்பு குழாய்களைக் கொண்டு அதன் உடலை சுற்றிப் பிணைத்தனர். பின்னர், 'வின்ச்' எனப்படும் கனரக இழுவை இயந்திரத்தின் உதவியுடன் குதிரை மெதுவாக குழியிலிருந்து மேலே தூக்கி நிறுத்தப்பட்டது.

குதிரையின் நிலை

இந்த சவாலான மீட்புப் பணி வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, மயக்கம் தெளிந்த குதிரை எழுந்து நின்று சாதாரணமாக நடமாடியது. அதிர்ஷ்டவசமாக அதற்கு சிறிய கீறல்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், பெரிய அளவிலான காயங்கள் ஏதுமின்றி குதிரை முற்றிலும் நலமுடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாராட்டுக்கள்

நெடுஞ்சாலையில் போக்குவரத்து மிகுந்த அதிகாலை நேரத்தில், சமயோசிதமாக செயல்பட்டு குதிரையின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கும் உள்ளூர் போலீசாருக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com