கொடூர நிலநடுக்கம்.. வெனிசுலாவில் பலி எண்ணிக்கை1,430ஆக உயர்வு.. மீட்புப்பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து. இடிந்து தரைமட்டமாகின.
வெனிசுலா
Published on

கராகஸ்,

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை தாண்டி உயர்ந்துள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வடக்கு கடலோரப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மோரோன் பகுதியை மையமாக வைத்து ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக அடுத்தடுத்து பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கின.

இந்த அதிபயங்கர இயற்கைச் சீற்றத்தினால் தலைநகர் கராகஸ் மற்றும் லா குவைரா ஆகிய நகரங்களில் இருந்த நூற்றுக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து. இடிந்து தரைமட்டமாகின. 10 அடுக்குமாடி கட்டிடங்கள் கூட பாய் சரிவது போலத் தட்டையாகச் சரிந்து விழுந்துள்ளன.

ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு

வரலாறு காணாத பேரிடரால், அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அன்று இரவில் அவசரநிலைப் பிரகடனம் செய்தார். சேதமடைந்த ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளுக்காக 200 மில்லியன் (சுமார் ரூ.2,000 கோடி) அமெரிக்க டாலர் புனரமைப்பு நிதியை அரசாங்கம் ஒதுக்குவதாக அறிவித்தார்.

இந்த பேரிடரில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 1,430 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. லா குவைரா மற்றும் கராகஸின் சில பகுதிகளில் மீட்புக் குழுவினர் பரவலாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த திருத்தப்பட்ட பலி எண்ணிக்கை வெளியாகி உள்ளது.

மீட்புப்பணிகள்

அங்கு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் தன்னார்வலர்களும் இடிபாடுகளிலிருந்து உயிர் பிழைத்தவர்களையும் உடல்களையும் மீட்டு வருகின்றனர். போதிய கனரக உபகரணங்கள் இல்லாதது மற்றும் அதிகாரிகளின் இருப்பு குறைவாக இருப்பது மீட்புப்பணிகளை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தபோதும் சர்வதேச மீட்புப் பணிகளுக்கு வலுசேர்க்கும் வகையில், 1,600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மீட்புக் குழுவினர் வந்துள்ளதாகவும், மேலும் கூடுதல் குழுக்கள் வந்து கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

55,000 பேர் மாயம்

நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் அல்லது சிக்கியுள்ளனர் என்று அந்நாட்டு அரசாங்கம் கூறியபோதிலும், நாட்டின் எதிர்க்கட்சியின் இணையதளத்தில் 55,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.

ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கங்களால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக்கூடும் என அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. இது, கடந்த நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

ஜனவரி மாதம் அமெரிக்காவால் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்ட அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் துணை ஜனாதிபதியாக பணியாற்றியபோதிலும், தன்னை ஒரு மாற்றத்தின் முகவராகச் சித்தரித்து வரும் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸுக்கு இந்தப் பேரழிவு நிகழ்வு, அரசியல் ரீதியாக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா உதவி

நிலநடுக்கங்களைத் தொடர்ந்து அமெரிக்கா வெனிசுலாவுக்கு உதவி அனுப்பியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே உறுதியளித்துள்ள 150 மில்லியன் டாலர்களுக்குக் கூடுதலாக, நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நிதித் தொகுப்பு அடுத்த ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com