

ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலிகளில் ஒன்றாக இருப்பது யூடியூப்தான். பிடித்த வீடியோக்கள், பாடல்கள் என சிறந்த பொழுதுபோகு தளமாக யூடியூப் உள்ளது. பலருக்கும் டிவி பார்க்கும் பழக்கமே குறைந்து போனதற்கு யூடியூப் தளம் ஒரு காரணம் என்றால் மிகையல்ல. அந்த அளவுக்கு ஸ்மார்ட் போன் பயனர்களிடம் பெரும் ஆதிக்கம் செலுத்தும் யூடியூப் அவ்வப்போது புதிய அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
யூடியூப்பில் இதுவரை எந்த வீடியோக்கள் முகப்புப் பக்கத்தில் தோன்ற வேண்டும் என்பதை அதன் பரிந்துரை அமைப்பே முடிவு செய்து வந்தது. ஆனால் இனி, பயனர்களே தங்களுக்கு விருப்பமான உள்ளடக்கங்களைத் தேர்வு செய்யும் புதிய வசதியை யூடியூப் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தனிப்பயன் முகப்புப் பக்கம் எனப்படும் இந்த வசதியின் மூலம், பயனர்கள் தங்களுக்கு விருப்பமான தலைப்புகளை நேரடியாக பதிவு செய்யலாம். உதாரணமாக செயற்கை நுண்ணறிவு, தனிநபர் நிதி மேலாண்மை, கிரிக்கெட் பகுப்பாய்வு, தொழில்நுட்ப விமர்சனம், சமையல், உடற் பயிற்சி அல்லது பயணக் காணொளிகள் போன்றவற்றை குறிப்பிட்டால், அதற்கேற்ற வீடியோக்களை ஏ.ஐ. தேர்வு செய்து தனிப்பட்ட முகப்புப் பக்கத்தை உருவாக்கித் தரும்.
பழைய பார்வை வரலாற்றை மட்டுமே நம்பாமல், பயனர்களின் தற்போதைய ஆர்வங்களுக்கும் ஏற்ப முகப்புப் பக்கத்தை மாற்றிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. விருப்பங்கள் மாறும்போது, புதிய தலைப்புகளைச் சேர்த்து முகப்புப் பக்கத்தையும் புதுப்பித்துக் கொள்ளலாம். இருப்பினும், ஒரே நேரத்தில் ஒரு தனிப்பயன் முகப்புப் பக்கத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், 30 நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அது தானாகவே நீக்கப்படும். தற்போது அமெரிக்காவில் சில பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் உலகம் முழுவதும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.