

லண்டன்,
அனைவருக்கும் கொழுக்கட்டை வழங்கி, லண்டனில் விநாயகர் சதுர்த்தி விழாவை வாகை முத்தமிழ் முற்றம் நடத்தி உள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகில் உள்ள டன்ப்ரிட்ஜ் வெல்ஸ் நகரில் ‘வாகை முத்தமிழ் முற்றம்’ அமைப்பின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக, வாகை முத்தமிழ் முற்றம் அமைப்பின் தலைவர் டாக்டர் செந்தில்வேலாயுதம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து விநாயகர் வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கொழுக்கட்டையும், காபியும் கொடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் வரவேற்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, ஜெயலட்சுமி கண்ணனின் விநாயகர் அழைப்புப் பாடல்களுடன் தமிழ் பாடல் முறைகளில் இசை நிகழ்வுகள் அரங்கேறின.
சென்னை இசைக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும், வயலின் கலைஞருமான துரை பாலசுப்ரமணியத்தின் சிறப்பு இசை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. அதன்பின்பு, பிரணவம் குழுவினர் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் சிறந்த பாடல்களைத் தேர்வு செய்து பாடி மக்களை இசை மழையில் நனைய வைத்தனர். நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு அறுசுவை உணவுகள் மதிய உணவாக பரிமாறப்பட்டன. நிறைவாக அனைவருக்கும் நன்றி தெரிவித்து செந்தில் வேலாயுதம் வழியனுப்பி வைத்தார்.