ஈராக் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - 42 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 42 பேர் உயிரிழந்தனர்.
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - 42 பேர் உயிரிழப்பு
Published on

பாக்தாத்,

ஈராக் நாடு தொடர் போர்களால் நிலை குலைந்துள்ளது. அங்கு வாழ்வாதாரம் இன்றி மக்கள் தத்தளிக்கின்றனர். இந்த நிலையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமையன்று அமைதியாக போராட்டம் தொடங்கியது. ஆனால் நேற்று முன்தினம் இந்த போராட்டம், வன்முறை போராட்டமாக மாறியது. பொதுச்சொத்துக்களுக்கு தீ வைக்கின்றனர். படைப்பிரிவு அலுவலகங்களை தீயிட்டு கொளுத்தினர்.

இந்த வன்முறையில் ஒரே நாளில் 42 பேர் பலியாகினர் என நேற்று வெளியான தகவல்கள் கூறுகின்றன. இவர்களில் 12 பேர் திவானியாஹ் நகரில் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 30 பேர் பிற இடங்களில் பலியாகி இருக்கின்றனர்.

பலியான 42 பேரில் 30 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக மற்றொரு தகவல் கூறுகிறது. தென் மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஈராக்கில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த போராட்டங்களில் 157 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

ஈராக்கில் வன்முறையில் மக்கள் பலியாகி வருவதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், கணிசமான மனித உரிமை மீறல்களால்தான் ஈராக்கில் உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. அப்பாவி மக்கள் பலியாவதற்கு மிகுந்த வேதனை அடைகிறோம் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com