போர் முடிந்து விடவில்லை; அணு ஆயுதங்களை ஈரான் முற்றிலும் நீக்க வேண்டும்: நெதன்யாகு எச்சரிக்கை

இஸ்ரேலின் நடவடிக்கைகளால், ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்புகள் பெருமளவில் அழிக்கப்பட்டு விட்டன.
போர் முடிந்து விடவில்லை; அணு ஆயுதங்களை ஈரான் முற்றிலும் நீக்க வேண்டும்:  நெதன்யாகு எச்சரிக்கை
Published on

டெல் அவிவ்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.

இந்நிலையில், ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், 21 மணிநேரம் நீடித்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்களை இருபுறமும் அமெரிக்காவின் கப்பல்கள் சூழ்ந்து கொண்டன. எனினும், ஈரானும் அந்த பகுதியில் தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளை வெளிப்படுத்தி வருகிறது. இந்த பகுதியை எரிசக்தி, உணவு வினியோகத்திற்கான சரக்குகள் போன்றவற்றை கொண்டு செல்லும் கப்பல்கள் அதற்கு ஈடாக, சுங்க கட்டணம் மற்றும் வரிகளை ஈரானுக்கு செலுத்த வேண்டியிருக்கும் என ஈரான் தெரிவித்தது.

இதனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, இஸ்ரேலின் நடவடிக்கைகளால், ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்புகள் பெருமளவில் அழிக்கப்பட்டு விட்டன. ஈரானின் அணு ஆயுத நெட்வொர்க், ஆயுத குழுக்கள், ஏவுகணை உற்பத்தி மையங்கள் மற்றும் மீதமுள்ள அச்சுறுத்தல்களை இஸ்ரேல் வெற்றியுடன் அழித்து விட்டது.

ஆனால், இன்னும் சில பணிகள் செய்ய வேண்டி உள்ளன என குறிப்பிட்டார். ஈரானிடம் 970 பவுண்டுகள் யுரேனியம் கையிருப்பில் இருக்கும் என சர்வதேச கண்காணிப்பகங்கள் மதிப்பீடு செய்துள்ளன.

அது வெடிகுண்டு உற்பத்தி செய்வதற்கான அளவில் உள்ளது. இது, மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜெருசலேமுக்கு தொடர்ந்து, ஆழ்ந்த பதற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதனால், ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டால், அது சிறந்த வழியாக இருக்கும். அச்சுறுத்தல் நிரந்தர அடிப்படையில் நீக்கப்பட்டு விட்டது என்பது உறுதி செய்யப்படும்.

இதற்காக நான் கால அட்டவணை எல்லாம் தரப்போவது இல்லை. ஆனால், அது ஒரு முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று கூறுகிறேன் என்றார். அமெரிக்காவுடன் எந்தவித மோதல் போக்கும் இல்லை என்றும் நெதன்யாகு அப்போது குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com