இந்தியாவுடனான 4 நாள் மோதலில் பாகிஸ்தான் ஆயுத படைகள் இழந்தது என்ன...?

பாகிஸ்தானில் இலக்குகளாக கொள்ளப்பட்ட பகுதிகளில் இருந்து உடைந்த பாகங்கள் இன்னும் நீக்கப்படவில்லை.
இந்தியாவுடனான 4 நாள் மோதலில் பாகிஸ்தான் ஆயுத படைகள் இழந்தது என்ன...?
Published on

கராச்சி,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம், பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது.

வான்வழியே நடந்த போரில், பாகிஸ்தான் விமான படைக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டின் 6 போர் விமானங்கள், 2 விலையுயர்ந்த கண்காணிப்பு விமானம், ஒரு சி-130 போக்குவரத்து விமானம், 30-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் பல்வேறு ஆளில்லா விமானங்களை இந்திய விமான படை தாக்கி அழித்தது என அதுபற்றிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று பொலாரி விமான படை தளத்தில், வானில் இருந்து தரைதளத்தில் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி சுவீடன் நாட்டு தயாரிப்பான விமானம் ஒன்று அழிக்கப்பட்டது.

விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடத்திலும் கூட போர் விமானங்கள் இருந்தன. இவை இழப்பில் கணக்கில் கொள்ளப்படவில்லை. ஏனெனில், பாகிஸ்தானில் இலக்குகளாக கொள்ளப்பட்ட பகுதிகளில் இருந்து இன்னும் உடைந்த பாகங்கள் நீக்கப்படவில்லை. இந்த தாக்குதலின்போது, சீன தயாரிப்பான விங் லூங் ஆளில்லா விமானங்களும் வீழ்த்தப்பட்டன என தகவல் தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com