

ஆம்ஸ்டர்டாம்,
நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆர்டிஸ் மிருகக்காட்சிசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த இருவாச்சி பறவைக்கு, 3டி-அச்சு தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட டைட்டானியம் செயற்கை அலகுகள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் புகழ்பெற்ற ஆர்டிஸ் மிருகக்காட்சிசாலை அமைந்துள்ளது. இங்கு பல வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 'சதர்ன் கிரவுண்ட் ஹார்ன்பில்' என்ற வகை இருவாச்சி பறவை ஒன்று உணவுக்காக தரையைக் கொத்தும்போது அந்த பறவையின் மேல் மற்றும் கீழ் அலகுகள் கடுமையாக உடைந்து சேதமடைந்தன. பறவைகளுக்கு அவற்றின் அலகுகள் இரை தேடவும், உடலை சுத்தப்படுத்திக் கொள்ளவும் மிகவும் இன்றியமையாதவை என்பதால், அலகு உடைந்த பின் இப்பறவையால் எதையும் செய்ய முடியாமல் அதன் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடம், யுஎம்சி உட்ரெக்ட் ஆஸ்பத்திரி மற்றும் 'அம்னோவிஸ்' ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு முயற்சியை மேற்கொண்டனர். பறவையின் உடைந்த அலகின் எஞ்சிய பகுதிகளை சிடி ஸ்கேன் செய்து, அதன் துல்லியமான அளவீடுகளைக் கொண்டு டைட்டானியம் உலோகத்தால் ஆன மேல் மற்றும் கீழ் செயற்கை அலகுகளை 3டி பிரிண்டர் மூலம் பிரத்யேகமாக வடிவமைத்தனர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க அறுவை சிகிச்சை 2026-ம் ஆண்டு அக்டோபர் மாத பாதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, புதிய அலகுகள் பொருத்தப்பட்டன. மருத்துவ வரலாற்றிலேயே ஒரு பறவையின் மேல் மற்றும் கீழ் ஆகிய 2 அலகுகளுமே முழுமையாக செயற்கை முறையில் 3டி தொழில்நுட்பத்தில் மீட்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். இது உலகின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அதே நாளிலேயே அந்த பறவை தனது புதிய செயற்கை அலகை பயன்படுத்தத் தொடங்கியது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அடுத்த நாள் காலையிலேயே அது தரையிலிருந்து ஒரு சிறிய எலியைத் தானாகவே கொத்தி எடுத்து உட்கொண்டதுடன், சில நாட்களிலேயே தனது இறகுகளையும் வழக்கம் போல் சீரமைக்கத் தொடங்கியுள்ளது. கால்நடை மருத்துவத் துறையில் இந்த மைல்கல் சாதனை, அலகு சேதமடையும் பிற பறவைகளைக் காப்பாற்ற புதிய கதவுகளைத் திறந்துள்ளதாக ஆர்டிஸ் மிருகக்காட்சிசாலை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.