கடும் இழுபறிக்கு நடுவே சீன அதிபர் ஜின்பிங்குடன் அமெரிக்க மந்திரி பேச்சுவார்த்தை

கடும் இழுபறிக்கு நடுவே அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தன் சீன பயணத்தில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்தார்.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

பீஜிங்,

உலகின் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகளாக அமெரிக்கா, சீனா இருக்கிறது. இந்த இருநாடுகளுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியில் இருந்தபோது சீனா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது.

கொரோனா தொற்று பரவலுக்கு சீனாதான் காரணம் என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. மேலும் தைவான் மீதான சீனாவின் ஆதிக்கம், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் மனித உரிமைகள் மீறல், தென் சீன கடலில் ராணுவ ஆதிக்கம், உக்ரைன் போரில் ரஷியாவுக்கான சீனாவின் ஆதரவு போன்ற காரணங்களால் இருதரப்புக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் வர்த்தக ரீதியில் இருநாடுகளும் போட்டிப்போட்டு கொண்டன.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் அமெரிக்கா-சீனா இடையேயான உறவை பலப்படுத்தும் செயல்களில் ஈடுபட போவதாக தெரிவிக்கப்பட்டது.

சர்ச்சை விவகாரம்

அமெரிக்க எம்.பி நான்சி பெலோசியின் தைவான் பயணம் விவாதத்திற்கு உள்ளாகின. இதன் நடுவே கடந்த ஆண்டு இந்தோனேசியாவின் பாலி நகரில் நடந்த ஜி20 மாநாட்டில் ஜோ பைடனும், ஜின்பிங்கும் நேரில் சந்தித்து கொண்டனர்.

இதனால் இருநாடுகள் இடையே நட்பு துளிர்ந்தது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். நட்புறவை பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்க அரசின் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள ஒரு தலைவர் சீனா செல்வார் என பைடன் தெரிவித்தார். அந்தவேளையில் உளவுபலூன் விவகாரம் காரணமாக சீனா பயணம் தடைப்பட்டது. சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் சீனா செல்வதாக கூறப்பட்டது. 2 நாள் அரசுமுறை பயணமாக அமையும் இதில் சீன அதிபர் ஜின்பிங்கை அவர் சந்திப்பார் என கூறப்பட்டது.

சீன பயணம்

அதன்படி கடந்த சனிக்கிழமையன்று விமானம் மூலம் ஆண்டனி பிளிங்கன் சீனா சென்றார். முன்னதாக மைக்கோரசாப்ட் நிறுவனர் பில்கேட்சின் சீன பயணத்தின்போது "அமெரிக்கா-சீனா இடையேயான உறவு உலகிற்கு நன்மை பயக்கும்" என ஜின்பிங் அவருடன் உரையாடினார்.

ஜின்பிங்கின் இந்த சூசகமான பேச்சு இருநாடுகளுக்கும் இடையே புதிய அஸ்திவாரத்தை அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பிளிங்கனின் சந்திப்பு அதனை மேலும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்தது. முதல் நாளில் சீனாவின் வெளியுறவு மந்திரி கின் காங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பல மணிநேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கு இடையே நிலவும் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஜின்பிங்குடன் சந்திப்பு

2-ம் நாளான நேற்று சீனாவின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான வாங் இ உடன் பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜின்பிங்கின் முதன்மை ஆலோசகர்களில் ஒருவராக வாங் இ உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிளிங்கன்-ஜின்பிங் சந்திப்பு நடக்காது என முதலில் கூறப்பட்டது.

நீண்ட இழுபறிக்கு பின்னர் இறுதியாக இருபெரும் தலைவர்களின் சந்திப்பு பீஜிங்கில் உள்ள அரசு அலுவலகத்தில் நடந்தது. இருநாட்டு பிரநிதிகள் நடுவே நடந்த இந்த நிகழ்வில் அமெரிக்கா-சீனா எதிர்கால ஒற்றுமை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. "பிளிங்கனின் சீன வருகை இருநாடுகளின் முன்னேற்றத்திற்கு ஏற்றவகையில் அமைந்துள்ளது" என்று ஜின்பிங் கூறினார். மேலும் "அமெரிக்கா-சீனா இடையேயான உறவு பரஸ்பர மரியாதை, நேர்மையின் அடிப்படையில் வருங்காலத்தில் அமையும்" என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டில் ஜோ பைடனும், ஜின்பிங்கும் சந்தித்து கொள்வார்கள் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com