

கீவ்,
உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஒரு சில நிபந்தனைகளுக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து இரு நாடுகளுக்கு இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் - ரஷியா போர் தொடங்கி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த அதிகாரிகள் இன்று உக்ரைன் சென்றுள்ளனர். உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் இந்த பயணத்தை மேற்கொண்டனர். ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளை உக்ரைன் அதிபர் விளாடிமரி ஜெலன்ஸ்கி சந்தித்தார். இதன் பின்னர் ஜெலன்ஸ்கி சமூகவலைதளத்தில் தளத்தில் வெளியிட்ட பதிவில்
ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தபோதும் உக்ரைனியர்களின் மன உறுதியை ரஷிய அதிபர் புதினால் உடைக்கமுடியவில்லை. ரஷியாவால் இந்த போரில் வெற்றிபெற முடியவில்லை. ரஷியாவின் மிகப்பெரிய ராணுவம் மற்றும் அதிநவீன ராணுவ உபகரணங்களின் தாக்குதலை உக்ரைன் எதிர்த்து நிற்கிறது.
போர் தொடங்கியதுமுதல் இன்றுவரை பார்க்கும்போது நாங்கள் எங்கள் சுதந்திர நாட்டை பாதுகாத்தோம் என்று கூற எங்களுக்கு உரிமை உள்ளது. எங்கள் நாட்டை நாங்கள் இழக்கவில்லை. ரஷிய அதிபர் புதின் தனது போரின் நோக்கத்தை அடையவில்லை. அவர் இந்த போரில் வெற்றிபெறவில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.