

மாஸ்கோ,
ஜிம்பாப்வே நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் உணவு பற்றாக்குறையை போக்க, ரஷியா மனிதாபிமான அடிப்படையில் 117 டன் வைட்டமின் செறிவூட்டப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மற்றும் 352 டன் மஞ்சள் பட்டாணி ஆகியவற்றை வழங்கியுள்ளது.
ஜிம்பாப்வேயின் மடபெலிலாண்ட் தெற்கு மாகாணத்தில் உள்ள மலாலுமே கிராமத்தில் அதிகாரப்பூர்வமாக இந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் மூலம், வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு இந்த உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
இந்த சூரியகாந்தி எண்ணெயில் வைட்டமின் ஏ மற்றும் டி சேர்க்கப்பட்டுள்ளது. இது ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க உதவும் என்று ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. ஜிம்பாப்வே அரசு இந்த உதவியை பாராட்டியுள்ளது.
மேலும் வரவிருக்கும் அறுவடை பருவத்திற்கு முன்னதாக, உலக உணவுத் திட்டம் மற்றும் ரஷிய கூட்டமைப்பின் ஆதரவுடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பற்றாக்குறை கால உதவி திட்டம் மூலம் புலிலிமா மாவட்டத்தில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட நலிவடைந்த குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
வறட்சி பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள அனாதைகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளால் நடத்தப்படும் குடும்பங்களை இலக்காக கொண்ட இத்திட்டம், உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் சமூகங்களுக்கு மிக அவசியமான உணவு ஆதரவை வழங்கியுள்ளது.
சமூக அளவில் உணவு பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உதவி அமைந்துள்ளது. ரஷியா கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்பிரிக்க நாடுகளுக்கு தொடர்ந்து உணவு மற்றும் உரங்களை மனிதாபிமான அடிப்படையில் வழங்கி வருகிறது.