ராணுவ ஆள்சேர்ப்பு முகாமுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ; கலெக்டர் தகவல்

திருவண்ணாமலையில் நடைபெற உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் சேர விரும்புபவர்கள் ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற ஏப்ரல் மாதம் 15ந் தேதி முதல் 25ந் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 17 வயது முதல் 23 வயது வரை உள்ள தகுதியான இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். அதாவது வயது 1.10.2020ந் தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.

சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் நர்சிங் உதவியாளர் கால்நடை, சிப்பாய் எழுத்தர் மற்றும் ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம், சிப்பாய் பொதுப் பணி, சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணியிடங்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும் முகாமில் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் www.joinindinarmy.nic.in என்ற இணையதள முகவரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 31ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான அனுமதி அட்டை இந்த இணையதளத்தில் வருகிற 31ந் தேதிக்கு பின்னர் ஆன்லைன் மூலம் வழங்கப்படும். அதில் ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான நாள், நேரம், இடம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இந்த ஆன்லைன் அனுமதி அட்டையினை ராணுவ ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, நகல் எடுத்துக் கொண்டு முகாம் நடைபெறும் இடத்திற்கு கொண்டு வர வேண்டும். ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். இதில் உடல்தகுதி, மருத்துவ மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு யாரும் உதவி செய்ய முடியாது.

முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்களின் கடினமான உழைப்பினால் மட்டுமே தேர்வாக முடியும். விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், குடியுரிமை, சாதி மற்றும் பிறப்பு ஆகிய சான்றிதழ்கள், அசல் மற்றும் நகலுடன் முகாம் நடைபெறும் நாள் அன்று கொண்டு வர வேண்டும்.

முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். இதில் 1.6 கிலோ மீட்டர் தூரம் ஒட்டப்பந்தயம், 9 அடி கால்வாய் தாவுதல், புல் அப்ஸ், சிக் சக் பளன்ஸ் ஆகிய உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படும். இதனை தொடர்ந்து உடல் அளவீடுகளுக்கான தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இம்முகாமில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் சென்னை மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் பொது நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com