பெங்களூரு,
பெங்களூரு டி.ஜே.ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அம்ஜத். மர வியாபாரி. இவரை கடந்த மாதம்(பிப்ரவரி) 29-ந் தேதி இரவு மர்ம நபர்கள் படுகொலை செய்தனர். இதுகுறித்து டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் அம்ஜத் கொலை செய்யப்பட்டிருந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது யூனிஸ் (வயது 29) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அம்ஜத்தை கொலை செய்திருந்தது தெரியவந்தது.
மேலும் அம்ஜத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு இந்திரேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்பு இருந்ததும், அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்திரேஷின் கூட்டாளியான யூனிஸ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அம்ஜத்தை கொலை செய்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து யூனிசை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் தலைமறைவாக இருந்த யூனிசை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய கொலை நடந்த இடத்திற்கு போலீசார் யூனிசை அழைத்து சென்றனர். அப்போது அங்கு அம்ஜத்தை கொலை செய்துவிட்டு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து போலீஸ்காரர் ஆனந்த் என்பவரை, யூனிஸ் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடினார்.
இதையடுத்து வானத்தை நோக்கி ஒருமுறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு சரண் அடைந்து விடும்படி இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி, யூனிசை எச்சரித்தார். ஆனால் அவர் சரண் அடைய மறுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடினார். உடனே யூனிசை நோக்கி துப்பாக்கியால், இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி சுட்டார்.
இதில், அவரது காலில் குண்டு துளைத்தது. இதனால் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அவரை மடக்கிப்பிடித்து போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு யூனிஸ், போலீஸ்காரர் ஆனந்த் ஆகியோர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் யூனிசின் கூட்டாளிகளையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.