ஈரோட்டில் மண்டல அளவிலான ஓவிய-சிற்ப கண்காட்சி 2 நாட்கள் நடக்கிறது - கலெக்டர் சி.கதிரவன் தகவல்

மண்டல அளவிலான ஓவிய, சிற்ப கண்காட்சி ஈரோட்டில் 2 நாட்கள் நடைபெற உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
Published on

ஈரோடு,

கலை பண்பாட்டுத்துறையில் ஓவிய, சிற்பக்கலைகளை மேம்படுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த துறையின் கீழ் சென்னை, கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரிகளும், மாமல்லபுரத்தில் சிற்ப கல்லூரியும் இயங்கி வருகிறது.

சிறந்த ஓவியம், சிற்ப கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருது வழங்குதல், மாநில அளவிலான ஓவிய, சிற்பக்கலைக்காட்சி நடத்துதல், தனி நபர், கூட்டு கண்காட்சி நடத்திட நிதி உதவி வழங்குதல் போன்ற பணிகள் கலை பண்பாட்டுத்துறை மூலம் நடைபெற்று வருகிறது.

கலை பண்பாட்டுத்துறையின் 7 மண்டலங்களிலும் ஆண்டுதோறும் ஓவிய, சிற்ப கண்காட்சி நடத்திட சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கலை பண்பாட்டுத்துறையின் கோவை மண்டலத்தின் சார்பில் நடப்பாண்டின் மண்டல அளவிலான கண்காட்சி ஈரோட்டில் வருகிற 21 மற்றும் 22-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிறந்த கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. எனவே இந்த விருப்பம் உள்ள ஓவிய, சிற்ப கலைஞர்கள் கண்காட்சியில் இடம் பெற தக்க கலை படைப்புகளின் புகைப்படத்தினையும், தங்கள் சுய விவர குறிப்பினையும் மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத்துறை, அரசு இசைக்கல்லூரி வளாகம், மலுமிச்சம்பட்டி, கோவை -641050 என்ற முகவரிக்கு வருகிற 15-ந்தேதிக்குள் அனுப்பலாம்.

புகைப்படங்களின் அடிப்படையில் தெரிவு செய்த கலை படைப்புகள் உரிய கலைஞர்களிடம் பெறப்பட்டு கண்காட்சியில் வைக்கப்படும். சிறந்த கலை படைப்புகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு கலை பண்பாட்டுத்துறையின் கோவை மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com