மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஆரணி அருகே 3 மாதமாக குடிநீர் கிடைக்காததால் கொதிப்படைந்த கிராம மக்கள் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Published on

ஆரணி,

ஆரணி அருகே உள்ள தச்சூர் ஊராட்சியில் அகிலாண்டபுரம், சுரைக்காய்பாளையம் ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன. மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இந்த ஊர்களில் குடிநீருக்காக 3 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மின்மோட்டாருடன் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றமுடியவில்லை.

இந்த பிரச்சினையால் கடந்த 3 மாதமாக பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்றோ அல்லது பணம் செலவழித்தோ தண்ணீர் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆழ்துளை கிணறை மேலும் ஆழப்படுத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோடைகாலம் தொடங்கும் முன்பே குடிநீர் பிரச்சினையால் அவதிப்பட்ட மக்கள் இனிவரும் காலங்களில் நிலைமை மோசமாகும் என்பதால் 2 ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று ஆரணி கோட்டைமைதானம் அருகே உள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அலுவலகம் முன்பு அவர்கள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com