29–ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் வாடிவாசலை அதிகாரிகள் ஆய்வு

வையம்பட்டி அருகே கருங்குளத்தில் 29–ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வாடிவாசலை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
29–ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் வாடிவாசலை அதிகாரிகள் ஆய்வு
Published on

வையம்பட்டி,

கருங்குளத்தில் ஜல்லிக்கட்டு


ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதேபோல திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தில் புனித அந்தோணியார் பொங்கல் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி சனிக்கிழமை அந்தோணியார் பொங்கலும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டும் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில், வருகிற 29ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்திட கிராம மக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். மேலும் ஜல்லிக்கட்டுக்கான அனுமதி பெறுவதற்காக திருச்சி கலெக்டர், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர், திருச்சி போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

அதிகாரிகள் ஆய்வு


இதையடுத்து நேற்று மதியம் திருச்சி மாவட்ட துணை கலெக்டர் ரமேஷ், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன், மணப்பாறை தாசில்தார் ராஜேந்திரன், மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா, வையம்பட்டி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசாரும், தீயணைப்பு துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் கருங்குளம் பகுதிக்கு வந்து ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்பின்னர் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள், கருங்குளம் ஊர் முக்கியஸ்தர்கள் ஏனோக், அந்தோணி, மணியம் சேசுராஜ், ரெத்தினம், அமல்ராஜ் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கருங்குளம் பழனிச்சாமி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது மாடுபிடி வீரர்கள் சீருடையில் தான் இருக்க வேண்டும், காளைகள் நேராக செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு விதிமுறைகள் அதிகாரிகள் விளக்கி கூறினர். அதன்பின்னர் வாடிவாசல் பகுதியை ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com