

தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை பல்வேறு காரணங்களால் சிலர் புதுப்பிக்கத் தவறி இருக்கலாம். அவ்வாறு புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அந்த அரசாணையில் தெரிவித்தவாறு இந்த சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் வருகிற மார்ச் மாதம் 1-ந்தேதிக்குள் இணையதளம் வாயிலாக தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையதளம் வாயிலாக பதிவை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவு தபால் மூலம் விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இணையதளம் வாயிலாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் நபர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்த வேண்டும். எனவே, இந்த வாய்ப்பை பதிவுதாரர்கள் பயன்படுத்தி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.