இறைவனிடம் கையேந்துங்கள்

எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ், இந்த உலகைப் படைத்த பின்னர் அதில் உயிரினங்களைப் படைக்க முடிவு செய்தான்.
இறைவனிடம் கையேந்துங்கள்
Published on

முதல் மனிதர் ஆதம் நபிகளைப் படைத்து சொர்க்கத்தில் உள்ள அனைவரையும் அவருக்கு சிரம் பணிய பணித்தான்.

ஆனால் சைத்தானோ இறைவா, நீ என்னை நெருப்பால் படைத்தாய். மனிதனையோ களிமண்ணால் படைத்தாய். நான் அவரை விட உயர்ந்தவன். நான் அவருக்கு தலைவணங்க மாட்டேன் என்றான்.

அல்லாஹ் அவனை சபித்து சொர்க்கத்தை விட்டு வெளியேற்றினான். ஆனால் சைத்தானோ, உலகில் மனிதனை நான் எப்போதும் வழிகெடுத்துக் கொண்டே இருப்பேன் என்றான்.

அதன் முதல் நிகழ்வாக ஆதம் நபிகளை வழிதவறச் செய்தான். எந்த மரத்தின் கனியைப் புசிக்காதீர்கள் என்று அல்லாஹ் தடுத்தானோ, அதனைப் புசிக்குமாறு சதி செய்து விட்டான்.

ஆதம் நபிகள் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதால் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றப் பட்டு உலகில் வந்து வாழ்ந்தார்கள். அப்போது அவர்கள் பல துன்பங்களை அனுபவித்தார்கள். தான் செய்த பாவத்தை உணர்ந்து அல்லாஹ்விடம் கையேந்தி இவ்வாறு பிரார்த்தித்தார்கள்:

எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம், நீ எங்களை மன்னித்து கிருபை செய்யாவிட்டால் நாங்கள் நஷ்டவாளிகள் ஆகி விடுவோம் (திருக்குர்ஆன் 7:23) என்று மனமுருக பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ்வும் அவர் மேல் இரக்கம் கொண்டு பாவமன்னிப்பு அளித்தான்.

எனவே நாமும் எத்தனைப் பெரிய பாவங்கள் செய்தாலும் பாவமன்னிப்பிற்காக அவனிடம் கையேந்தினால் அல்லாஹ் நம் பாவங்கள் அனைத்தையும் நிச்சயமாக மன்னிக்கின்றான்.

நாமும் தினந்தோறும் தொழுகையில் ஈடுபட்டு, திருக்குர்ஆன் ஓதி, தான தர்மங்கள் மற்றும் நல்லறங்கள் செய்வதோடு, இந்த பிரார்த்தனையை ஓதி வருவோம். இதன்மூலம் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நல்லடியார்களாக வாழ்வோம்.

- முகைதீன் காமில், சென்னை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com