ரியல் எஸ்டேட் துறையில் இந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த சலுகைகள்

பொதுமக்கள் வரவேற்கும் விதத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்
Published on

மத்திய நிதி அமைச்சகம், ஜி.எஸ்.டி கவுன்சில் ஆகியவை சென்ற நிதி ஆண்டில் ரியல் எஸ்டேட் துறைக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் பொதுமக்கள் வரவேற்கும் விதத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்த சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

குறைந்த விலை வீடுகள்

ஏப்ரல், 2019-க்குப் பிறகு வீடு வாங்குபவர்கள் புதிய ஜிஎஸ்டி வரி முறைகள் படி வரி செலுத்துவதே போதுமானது. விலை குறைந்த (Affordable homes) ரக வீடுகள் என்றால் ஒரு சதவிகிதம் வரியும், மற்ற வகை வீடுகள் என்றால் 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியும் செலுத்தினால் போதும். ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீடுகள் குறைந்த விலை வீடுகள் என்று இதுவரை வரையறை செய்யப்பட்டு வந்தன. இனிமேல், மெட்ரோ நகரங்களிலும், பிற நகரங்களிலும் ரூ.45 லட்சம் வரை உள்ள வீடுகள் குறைந்த விலை வீடுகளாகக் கருதப்படும்.

அதாவது, மெட்ரோ நகரங்களில் சுமார் 650 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடுகளும், பிற நகரங்களில் சுமார் 970 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடுகளும் குறைந்த விலை வீடுகளாகக் கருதப்படும். மேலும், கட்டுமானப் பணிகள் நடைபெறும் கட்டிடங்கள் மற்றும் பணி நிறைவுச் சான்றிதழ் வழங்கப்பட்ட வீடுகளுக்கு ஜி.எஸ்.டி கணக்கிடப்படாது.

முலதன ஆதாய வரி விலக்கு

வீடு விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்துக்கு சென்ற நிதி ஆண்டு வரையில் நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டி இருந்தது. ஆனால், இந்த நிதி ஆண்டு முதல் வீட்டை விற்பதன் மூலம் கிடைக்கும் ரூ.2 கோடி வரையிலான மதிப்புக்கு எவ்விதமான நீண்ட கால மூலதன ஆதாய வரியும் செலுத்த வேண்டியதில்லை. அதற்கு பதிலாக மற்றொரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம். இந்த சலுகையை வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள இயலும்.

வாடகை வீடுகளுக்கான வரி விலக்கு

வாடகை மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.1.8 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் அதற்கான வரி கணக்கிடப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த அளவு ரூ.2.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகை வரை வாடகை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை. மேலும், வாடகைக்கு விடப்படாத வீட்டுக்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச வருமானமாக ரூ.12 ஆயிரம் கிடைத்ததாக கணக்கு காட்டி வரி செலுத்த வேண்டியதாக இருந்தது. இனிமேல் நடப்பு நிதியாண்டு முதல் அதுபோன்ற வரிகள் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com