

மும்பை, இந்தியாவின் நிதி தலைநகரமாகும். நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வாழ்க்கை தேடி அங்கு செல்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானோர் மும்பையில் குடியேறி இருக்கின்றனர். அங்குள்ள தாராவியில் தமிழர்கள்தான் அதிகளவில் உள்ளனர். மும்பையின் பெருமைமிகு பக்கம் ஒரு பக்கம் தெரிந்தாலும், மற்றொரு கருப்பு பக்கமாக நாட்டிலேயே பெண்களும், குழந்தைகளும் அதிகமாக காணாமல் போவதும் அங்குதான்.
2023-ம் ஆண்டு தரவுப்படி நாடு முழுவதும் 8.7 லட்சம் பெண்களும், குழந்தைகளும் காணாமல் போனதாக போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் மும்பையில் மட்டும் 1.2 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே மராட்டிய அரசாங்கம் இதில் கவனம் செலுத்தி, இதற்கான காரணங்களை ஆராயவும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவும் தகுதியான துடிப்புள்ள ஒரு போலீஸ் அதிகாரியை நியமிக்க முடிவு செய்தபோது, அரசின் கண்களில் தென்பட்டது கூடுதல் டி.ஜி.பி.அஸ்வதி டோர்ஜே தான்.
அவர் வேறு யாருமல்ல, கேரளாவில் உள்ள புகழ் பெற்ற பட தயாரிப்பாளரான அடூர் கோபாலகிருஷ்ணனின் மகள் ஆவார். இவரது தலைமையில் ஒரு சிறப்பு படை அமைக்கப்பட்டது. அவர் காணாமல் போன பெண்கள், குழந்தைகளை கண்டுபிடிக்க மட்டும் 49 சிறப்பு பிரிவுகளை உருவாக்கியது மட்டுமல்லாமல், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் ஒரு அதிகாரியை இதற்காக தனியாக நியமித்தார்.
இதன் தொடர்ச்சியாக அஸ்வதி டோர்ஜே, குழந்தைகளும், பெண்களும் காணாமல் போவதற்கான அடிப்படை காரணம் என்ன? என்பதை ஆராய்ந்தார். அவர் கண்டுபிடித்த காரணங்கள் மும்பைக்கு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் பொருந்தும். ஆன்லைனில் உருவாகும் உறவுகள் தான் முக்கிய காரணம். ஆன்லைனில் உருவாகும் உறவுகளின் போது, அவர்களுக்கு நட்பு வலை வீசுபவர்கள் ஆசை வார்த்தைகளை கூறி, புகழ் மாலைகளை சூடி தங்கள் வலையில் வீழ்த்தி, வீட்டை விட்டு வெளியே வரவழைத்து கடத்திச் சென்று விடுகிறார்கள்.
கொரோனா காலத்தில்தான் இந்த ஆன்லைன் உறவுகள் அதிகரிக்க தொடங்கியது என்று கூறிய அஸ்வதி டோர்ஜே, அவர் தலைமையில் இயங்கும் சிறப்பு படை பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகளை கண்டுபிடித்துள்ளது. முதல் ஆண்டிலேயே காணாமல் போனவர்களில் 60 சதவீதம் பேர் கண்டுபிடிக்கப்பட்டு, குடும்பங்களோடு இணைக்கப்பட்டனர். 3 ஆண்டுகளில் அந்த அளவு 97 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதோடு அஸ்வதியின் பணி முடிந்துவிடவில்லை. ஒவ்வொரு பள்ளிகளுக்கும் பெண் போலீசாரை அனுப்பி, அவர்கள் மூலம் ஆன்லைன் உறவுகளால் ஏற்படும் கேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அஸ்வதி ஒரு பக்கம் இருக்க, மும்பை மாநகராட்சியின் 160 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. அவர் பெயர் அஷ்வினி பிடே. இவர் இதற்கு முன்பு மும்பை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநராக இருந்த போது, சுரங்க பாதையில் 33 கிலோ மீட்டர் மெட்ரோ ரெயில் பாதையை குறுகிய காலத்தில் அமைத்து சாதனை படைத்தவர். அவர் “மெட்ரோ பெண்” என்று மும்பைவாசிகளால் புகழப்பட்டவர். ஆக இப்போது மும்பையை 2 பெண் அதிகாரிகள் முன்னேற்றப் பாதையில் அழைத்து சென்று கொண்டு இருக்கிறார்கள்.