பாலியல் குற்றங்களை கண்காணிக்கும் 8 நிறங்கள்

தென் மண்டலத்தில் தொடங்கியிருக்கும் இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்து உள்ளார்.
பாலியல் குற்றங்களை கண்காணிக்கும் 8 நிறங்கள்
Published on

சந்தன நிற ஆடைக்கு சொந்தக்காரரான கவிஞர் வைரமுத்துவிடம் ஒரு முறை தினத்தந்தி செய்தியாளர், 'நீங்கள் எழுதிய பாடல்களில் மிக குறைவான நேரத்தில் எழுதிய பாடல் எது? என்று கேட்டபோது, 'பாட்ஷா படத்துக்கு அரங்கம் எல்லாம் அமைத்து ரஜினிகாந்த் காட்சியை படம் பிடிக்க தயாரான நேரத்தில் காட்சிகளை விவரித்துவிட்டு உடனடியாக ஒரு பாடலை எழுதி தரும்படி கேட்டனர். அப்போது, “ரா ரா ரா ராமையா, எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா” என்ற பாடலை 10 நிமிடங்களில் எழுதினேன். அது மிகவும் 'ஹிட்' ஆகி, பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது' என்றார். அந்த பாடல் வாழ்க்கையின் தத்துவத்தை எட்டாக பிரித்தது. அதேபோல பாலியல் குற்றவாளிகளையும் 8 ஆக பிரித்து கண்காணிக்க 8 நிறங்களை தேர்ந்தெடுத்துள்ளார் தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி.

தனது கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 10 மாவட்டங்களில் பெண்களை கேலி, கிண்டல் செய்வது உள்பட கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 15 ஆயிரம் குற்றவாளிகளை அவர் வகைப்படுத்தியுள்ளார். இந்த 10 மாவட்டங்களிலும் ஆண்டுக்கு 1,500 முதல் 2,000 வரையிலான பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகின்றன. சர்வதேச போலீசில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஜயேந்திர பிதாரி, நெஞ்சில் ஈரம் இல்லாத பாலியல் குற்றவாளிகளுக்கு நிறம் கொடுத்து அடையாளப்படுத்தும் நடவடிக்கையை தென் மண்டலத்தில் தொடங்கியிருக்கிறார். இதில் முதல் பிரிவாக, மிகவும் அபாயகரமான பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக பாலியல் குற்றங்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் ஆரஞ்சு கலரிலும், சமூக வலைதளம் வாயிலாக பாலியல் குற்றங்களை செய்பவர்கள் நீல நிறத்திலும், அமைப்பு ரீதியாக திட்டமிட்டு பாலியல் குற்றங்களை செய்பவர்கள் மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் கருப்பு நிறத்திலும், 18 வயதுக்கு கீழ் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சில்வர் நிறத்திலும், ஓரின சேர்க்கை குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கத்தரிப்பூ நிறத்திலும், சைகைகள் மூலம் பாலியல் குற்றங்கள் செய்பவர்கள் குறிப்பாக ஈவ்டீசிங் செய்பவர்கள் இளஞ்சிவப்பு நிறத்திலும், எட்டாவதாக சந்தர்ப்ப சூழ்நிலையால் திடீரென பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பச்சை நிறத்திலும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். கருப்பு-வெள்ளை கண்களுக்கு இனிமேல் குற்றவாளிகளின் குற்ற பின்னணியை நிறமே காட்டி கொடுத்து விடும்.

8 பிரிவாக வரிசைப்படுத்திய குற்றவாளிகளை 8 திக்குகளிலும் கண்காணிப்பதன் மூலம் பாலியல் குற்றங்களை தடுக்கமுடியும். தென் மண்டலத்தில் தொடங்கியிருக்கும் இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்து உள்ளார். இது மிகவும் வரவேற்புக்குரியது. சென்னையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாட்டை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் விஜய் பேசும்போது, “அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படவேண்டும். எந்த தலையீடும் இருக்காது. பெண்களின் பாதுகாப்புக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்தே ஆகவேண்டும்" என்று கூறி போலீசாருக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்துள்ளார். இந்த 8 நிறங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ள பாலியல் குற்றவாளிகளை போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, பாலியல் குற்றங்களுக்கு முடிவுரை எழுதவேண்டும். அரசு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டது, இனி பாலியல் குற்றங்களை ஒடுக்குவது போலீசாரின் கைகளில்தான் இருக்கிறது. குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாவதை தடுக்க பெற்றோர், ஆசிரியர்களும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com