அரசியல் நாகரிகத்தில் புதிய அத்தியாயம்

த.வெ.க. அரசுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தாமல் தி.மு.க. கவனித்துக்கொண்டு இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
அரசியல் நாகரிகத்தில் புதிய அத்தியாயம்
Published on

அரசியல் களத்தில் ஆயிரம் கருத்து மோதல்கள், விவாதங்கள் இருக்கலாம். ஆனால் அது அரசியலோடு நின்றுவிடவேண்டும். அந்த கோட்டைத் தாண்டி அவர்களின் சொந்த வாழ்க்கையில் பிரதிபலித்துவிடக்கூடாது. ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டவேண்டும். அதுதான் அரசியல் நாகரிகமாக போற்றப்படுகிறது. அப்படிப்பட்ட அரசியல் நாகரிகம் பழைய காலங்களில் தழைத்தோங்கியிருந்தது.

1967 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, அறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் பெருந்தலைவர் காமராஜர் இப்போதுதான் தி.மு.க. ஆட்சிக்கு வந்து இருக்கிறது. அவர்களை யாரும் குறை கூறக்கூடாது. 6 மாதங்கள் அமைதியாக இருந்து அவர்கள் எப்படி ஆட்சி செய்கிறார்கள்? என்று பார்க்கவேண்டும் என்றார். அது அவருடைய பெருந்தன்மையை காட்டியது. அதே அரசியல் நாகரிகத்தை அண்ணாவும் காட்டினார். பதவியேற்ற உடனேயே காமராஜர் வீட்டுக்கு சென்று அவருடைய வாழ்த்துகளையும், ஒத்துழைப்பையும் அண்ணா கோரினார்.

அந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியினரும், தி.மு.க.வினரும் சித்தாந்த ரீதியில் அனல் பறக்கும் சொற்போர் நிகழ்த்தினாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் அன்பு போர்தான் நடத்தினார்கள். காங்கிரசையும், காமராஜரையும் அரசியல்ரீதியாக கடுமையாக தாக்கிக்கொண்டு இருந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் தன்னுடைய சென்னை 'தினத்தந்தி' கட்டிடத்தை காமராஜரை வைத்தே திறந்துவைத்தார்.

அதுபோல சி.பா.ஆதித்தனார் ஒரு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் பொங்கல் பண்டிகையை தனது வீட்டில் கொண்டாடவேண்டும் என்ற உணர்வில் முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பொங்கலுக்கு முந்தையநாள் சி.பா.ஆதித்தனாரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அந்த அரசியல் நாகரிகம் இப்போது மீண்டும் துளிர்விட்டிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

17-வது சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் வாகை சூடி, கூட்டணி கட்சிகளுடன் கரம்கோர்த்து ஆட்சியமைத்துள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், “த.வெ.க. அரசுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தாமல் தி.மு.க. கவனித்துக்கொண்டு இருக்கும்” என்று கூறினார். விஜய்யும் முதல்-அமைச்சராக பொறுப்பெற்றவுடன் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அடுத்தநாள் சட்டசபையில் உறுப்பினராக பதவியேற்றவுடன், அண்ணா செய்ததுபோல யாரும் எதிர்பார்க்காத வகையில் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்றார்.

அவரை வாசலில் காத்திருந்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். விஜய்யும், மு.க.ஸ்டாலினை மிக அன்போடு ஆரத்தழுவினார். மு.க.ஸ்டாலினும் அவரது கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். இது தமிழக அரசியல் நாகரிகத்தின் புதிய தொடக்கமாக இருந்தது.

இந்த சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின், 'முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்பு நிறைந்த வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்' என்று கூறியது புதிய உறவின் நல்ல தொடக்கமாக இருந்தது. இதுபோல வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான், சி.வி.சண்முகம், திருமாவளவன் ஆகியோரை சந்தித்தும் விஜய் வாழ்த்து பெற்றது துள்ளாத மனதையும் துள்ள வைத்துள்ளது.

அரசியலில் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் எதிரிக்கட்சிகள் அல்ல, தோழமை கட்சிகள்தான் என்பதை பிரதிபலிப்பதாக உள்ளது. குடும்பங்களில் பங்காளிகளுக்குள் சண்டை இருந்தாலும், ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். அதுபோல அரசியலில் மோதல் இருந்தாலும் அதைத்தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் அன்பு மேலோங்கியிருக்கவேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு இனி நனவாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com