கால்பந்தின் வல்லரசையே அலற வைத்த குட்டி நாடு

59-வது நிமிடத்தில் கேப் வெர்டே அணியின் துவார்டே அடித்த கோல் மூலம் ஆட்டம் சமனானது.

கால்பந்தின் வல்லரசையே அலற வைத்த குட்டி நாடு
Published on

23-வது கால்பந்து உலக கோப்பை போட்டி கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி தொடங்கி வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. கால்பந்து வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பு உலக கோப்பை போட்டியில் 48 அணிகள் பங்கேற்றாலும், 147 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா அதில் இல்லையே என்பது இந்தியர்களுக்கு வருத்தமாக இருந்தாலும், இந்த போட்டிகளை பார்க்கவும். கண்டுகளிக்கவும் ஆர்வம் குறையாதவர்களாகவே இருக்கின்றனர். 'அலாரம்' வைத்து எழுந்து ஆட்டத்தை பார்க்கும் அளவுக்கு கால்பந்து ரசிகர்கள் கூட்டம் இந்தியாவில் ஏராளம். அப்படியாக இந்திய நேரப்படி, கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு நடந்த ஒரு போட்டி இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதையும் தன்வசப்படுத்தியது.

கால்பந்து என்பது வீரர்களால்தான் விளையாடப்படுகிறதேதவிர, எதிர்பார்ப்புகளால் அல்ல என்பதை நிரூபிக்கும் போட்டியாக அது இருந்தது. இந்த போட்டியில் கால்பந்தின் வல்லரசான ஜாம்பவான் அர்ஜென்டினாவும், இப்போதுதான் முதல்முறையாக உலக கால்பந்து போட்டியில் கால்பதித்துள்ள குட்டி ஆப்பிரிக்க நாடான கேப் வெர்டே நாடும் களம்கண்டன. கேப் வெர்டே நாட்டின் மக்கள்தொகையே 5.5 லட்சம்தான். உலக கால்பந்து போட்டி வரலாற்றிலேயே மிகக்குறைந்த மக்கள்தொகையை கொண்ட ஒரு நாடு 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதிபடைத்தது இதுதான் முதல்முறையாகும்.

போட்டி தொடங்கிய முதல்நிமிடத்தில் இருந்தே ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி முதல் கோலை அடித்து கணக்கை தொடங்கிவைத்தார். அதன்பிறகு ஆட்டவேகம் அர்ஜென்டினா பக்கமே திரும்பும் என்று ரசிகர்கள் நினைத்தநேரத்தில், 59-வது நிமிடத்தில் கேப் வெர்டே அணியின் துவார்டே அடித்த கோல் மூலம் ஆட்டம் சமனானது. ஆட்டநேரம் முடிந்தும் சமன் என்ற நிலை நீடித்ததால், வெற்றியாளரை தீர்மானிக்க கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்பட்டது. கூடுதல்நேரம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மார்டினெஸ் கோலடித்தார். இதனால் அர்ஜென்டினாவின் கை மீண்டும் உயர்ந்தது. ஆனால் இது வெகுநேரம் நீடிக்கவில்லை.103-வது நிமிடத்தில் கேப் வெர்டே அணி வீரர் லோப்ஸ் கப்ரால் அடித்த வரலாற்றிலேயே அற்புதமான கோலால், மீண்டும் ஆட்டம் சமன்நிலைக்கு தள்ளப்பட்டது. இப்படியாக ஆட்டநேரமான 90 நிமிடத்தை தாண்டியும் விறுவிறுப்பு சற்றும்குறையாமல் ரசிகர்களை அர்ஜென்டினா-கேப் வெர்டே ஆட்டம் கட்டிப்போட்டது.

ஒரு கட்டத்தில் ‘பெனால்டி ஷூட்-அவுட்’ மூலம்தான் ஆட்டம் முடிவுக்கு வருமோ? என ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் மனஓட்டம் இருந்த நேரத்தில், 111-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் கிறிஸ்டியன் ரோமிரோ தலையால் முட்டிய பந்து, கேப் வெர்டே வீரர் டினே போர்கெசின் கையில் பட்டு சுயகோலாக மாறி அது அர்ஜென்டினாவுக்கு வெற்றிமகுடத்தை கொடுத்தது. ஆட்டத்தில் இரண்டுமுறை பின்தங்கியபோதும், மீண்டெழுந்து கோல் அடித்து, ஆட்டம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறியே தெரியாமல், கால்பந்து விளையாட்டின் வல்லரசான அர்ஜென்டினாவுக்கே தண்ணி காட்டியது கேப் வெர்டே வீரர்களின் மன உறுதிக்கு சான்றாக இருந்தது. அதிலும் அந்த அணியின் கோல்கீப்பர் வோசின்யா, அர்ஜென்டினாவின் கோல் வாய்ப்புகளை தடுத்துநிறுத்தி ஒரு தூணாக இருந்தார். ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் டிராவுடன் தொடங்கிய கேப் வெர்டேயின் உலக கோப்பை கால்பந்து பயணம், இறுதியில் அர்ஜென்டினாவையும் அலற வைத்தது. ஆடிய 4 ஆட்டங்களில் கேப் வெர்டே 3 முன்னாள் சாம்பியன்களை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளது. அர்ஜென்டினாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் நீண்டநேரம் போராடி தோல்வியை தழுவினாலும், ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் மனதை கேப் வெர்டே வென்றுவிட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com