தனியார்மயமாகும் விமான நிலையங்கள்

சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களை பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தனியார்மயமாகும் விமான நிலையங்கள்
Published on: 

பொதுவாக, வணிகம் செய்வது அரசின் வேலை அல்ல. அரசின் கடமை, மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள், தொழில் திட்டங்கள், வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் திட்டங்கள், அடிப்படை தேவைகளுக்கான திட்டங்கள், சமூகநலத் திட்டங்கள், கல்வி, மருத்துவம், உணவு வழங்கல் போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்துவதுதான்.

இதை விட்டுவிட்டு, தனியார் நிறைவேற்றவேண்டிய வணிகத் திட்டங்களில் அடியெடுத்து வைப்பது சரியான நடைமுறையாக இருக்காது. மத்திய அரசுகூட பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில்கூட, ஐ.டி.பி.ஐ. வங்கியில் மத்திய அரசு மற்றும் எல்.ஐ.சி. நிறுவனத்திடம் இருக்கும் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்குகளை விற்க முடிவு எடுக்கப்பட்டது.

அதுபோல, இப்போது சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களை பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி, ஐதராபாத், மும்பை, பெங்களூரு ஆகிய விமான நிலையங்கள் தனியார் வசம்தான் இருக்கின்றன. தற்போது இந்த விமான நிலையங்களின் 74 சதவீத உரிமை தனியார் வசமும், 26 சதவீத உரிமை மட்டுமே இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன.

டெல்லி விமான நிலையம் ஜி.எம்.ஆர். கன்சார்ட்டியம் நிறுவனத்திடமும், மும்பை விமான நிலையம் ஜி.வி.கே. கன்சார்ட்டியம் நிறுவனத்திடமும் வழங்கப்பட்டிருந்தன. பின்னர், மும்பை விமான நிலையத்தை அதானி நிறுவனம் கையகப்படுத்தியது. இரண்டாவது சுற்றில் ஆமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் தனியாருக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்த விமான நிலையங்களின் மெருகும், பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகளும், சுத்தமான பராமரிப்பும் மிகவும் சிறப்பாக இருப்பதால், அனைத்து விமான நிலையங்களையும் தனியார் மயமாக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. முதல்-அமைச்சர் விஜய், கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் தொடர்ச்சியாக குறைவாகவே உள்ளன.

தென்னிந்தியாவின் முதன்மை விமான போக்குவரத்து மையமாக இருந்தபோதிலும், இந்த விமான நிலையம் சர்வதேச தரநிலைகள் மற்றும் பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறி வருகிறது. சென்னை விமான நிலையம் இப்போது 6-வது இடத்தில்தான் இருக்கிறது. சென்னை விமான நிலையத்தின் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துதல், விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளை அதிகரித்தல், சரக்குகள் கையாள்வதை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்கி, முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க முடியும்.

எனவே, சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இயக்கம், மேலாண்மை மற்றும் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை தகுதியான வேறொரு நிறுவனத்திடம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்படைக்கவேண்டும் என்று கோரியிருந்தார். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

இதுபோல, நாடு முழுவதும் மேலும் 11 விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முடிவில் திருச்சி விமான நிலையமும் இடம்பெற்றிருப்பது சிறப்புக்குரியதாகும். தமிழ்நாட்டில் உள்ள மற்ற விமான நிலையங்களையும் தனியார் மயமாக்கினால், பயணிகளுக்கான வசதிகளும், சவுகரியமும் பெருகும். வெண் பஞ்சு போல மிதக்கும் மேக கூட்டங்களை வருடிச் செல்லும் எந்திர பறவையான விமானங்களின் வருகையால் தமிழக விமான நிலையங்களும் அழகுடன் மிளிரும்.

X