தங்கம் வாங்குவதை தவிர்க்க முடியாது

நமது மக்களின் பழக்க வழக்கங்களோடும், கலாசாரத்தோடும் மங்களகரமான தங்கம் பின்னிப்பிணைந்ததாகும்.
தங்கம் வாங்குவதை தவிர்க்க முடியாது
Published on: 

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு கணக்கு பற்றாக்குறையால் தடுமாறிக்கொண்டு இருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.2 பில்லியன் டாலராக (சுமார் ரூ.39 ஆயிரத்து 900 கோடி) அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு.

கச்சா எண்ணெய் இறக்குமதி

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் வருவாயின் மதிப்பை விட அதிகமாக இருப்பதைத்தான் இது காட்டுகிறது. நமது ஏற்றுமதி 132 பில்லியன் டாலராக (ரூ.12.54 லட்சம் கோடி) இருக்கும் நிலையில், இறக்குமதி 218 பில்லியன் டாலராக (ரூ.20.71 லட்சம் கோடி) இருப்பதால் பற்றாக்குறை 3 மாதங்களிலேயே 86.1 பில்லியன் டாலராக (ரூ.8.18 லட்சம் கோடி) எகிறியிருக்கிறது. இதற்கு எரிபொருள் அதாவது கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அதிகமாக செலவழிக்கப்பட்டுள்ளது முக்கிய காரணமாகும். மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்த தொகையை திரும்ப எடுத்திருக்கிறார்கள்.

பிரதமர் வேண்டுகோள்

இந்தியாவின் அந்நிய செலாவணியும் இந்த 3 மாதங்களில் 8.1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.76 ஆயிரத்து 950 கோடி) குறைந்திருக்கிறது. இந்தியாவின் மொத்த தங்கத் தேவையில் 98 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதியைக் கட்டுப்படுத்த கடந்த மே மாதம் 13-ந்தேதி தங்கம், வெள்ளி உள்ளிட்ட மதிப்புமிக்க உலோகங்களுக்கான சுங்கவரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது.

இறக்குமதியைக் குறைப்பதும், மேற்காசியாவில் நீடித்து வரும் போருக்கு மத்தியில் கச்சா எண்ணெய் மற்றும் உரம் போன்ற அத்தியாவசிய பொருட்களை கண்டிப்பாக இறக்குமதி செய்தே ஆகவேண்டிய நிலையில் அதற்காக அந்நிய செலாவணியைப் பாதுகாப்பதுமே இந்த வரி உயர்வின் நோக்கமாக கருதப்படுகிறது. கடந்த மே மாதம் 10-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தள்ளி வைக்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தங்கக் கட்டுப்பாடு சட்டம்

தேவையில்லாமல் தங்கம் வாங்கவேண்டாம், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களை தேர்வு செய்யுமாறு இப்போது மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளார். இது நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது என்றாலும் நமது மக்களின் பழக்க வழக்கங்களோடும், கலாசாரத்தோடும் மங்களகரமான தங்கம் பின்னிப்பிணைந்ததாகும்.

ஏற்கனவே இதுபோன்ற சூழ்நிலையில் அந்நிய செலாவணியை கட்டுப்படுத்துவதற்காக 1963-ம் ஆண்டு நிதி மந்திரியாக இருந்த மொரார்ஜி தேசாய் தங்கக் கட்டுப்பாடு சட்டத்தைக் கொண்டுவந்தார். அதாவது இப்போது நகைகள் செய்வதற்கு பயன்படுத்திவரும் 22 காரட் தங்கத்துக்கு பதிலாக 14 காரட் தங்கம்தான் பயன்படுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

இந்த சட்டம் பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பை சம்பாதித்து கொடுத்ததால் ரத்து செய்யப்பட்டது. தங்கம் வாங்குவதைக் குறைக்கலாமே தவிர, தள்ளிப்போடவோ, தவிர்க்கவோ நிச்சயம் முடியாது. முதல்-அமைச்சர் விஜய் கூட அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி வைத்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் அண்ணன் சீர் திட்டத்தில் புதிய வாழ்க்கையை தொடங்கும் ஏழை மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும், பட்டுப்புடவையும் வழங்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளார். வங்கிகளில் தங்க நகை கடன் வாங்குவதும் அதிகரித்திருக்கிறது. எனவே ஆபரணத்துக்காக மட்டுமல்லாமல், சேமிப்புக்காகவும், அவசரத்துக்கு அடகு வைத்து கடன் வாங்குவதற்கும் வேண்டும் என்பதால் தங்கம் அத்தியாவசியப் பொருளாக ஜொலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com