மக்களால் தாங்க முடியுமா, இந்த விலைவாசி உயர்வை?

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், ‘எப்போதுமே நாம் என்ன சொன்னாலும் மக்களுக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும்’ என்பார்.
மக்களால் தாங்க முடியுமா, இந்த விலைவாசி உயர்வை?
Published on

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், எப்போதுமே நாம் என்ன சொன்னாலும் மக்களுக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும் என்பார். அதனால்தான் தினத்தந்தி செய்தியாளர்களுக்கு பொன் விதியாக, பேச்சு வழக்கில் இருக்கும் தமிழே உயிருள்ள தமிழ். அதை கொச்சை நீக்கி எழுத வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார். அந்த வகையில் பணவீக்கம் என்று சொன்னால் பாமர மக்களுக்கு புரியாது. அதை விலைவாசி உயர்வு என்றுதான் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். விலைவாசி உயர்வு என்பது ஒரு அடங்காத குதிரையை போன்றது. அதை அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், வளர்ச்சி பாதையில் அரசும் வேகமான பாய்ச்சலில் செல்லமுடியும். மக்களும் மகிழ்ச்சியோடு தங்கள் வருமானத்தை வைத்து நிம்மதியாக கஷ்டம் இல்லாமல் வாழ முடியும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலில் பொருளாதாரம் துவண்டு போய் இருந்தது. இப்போது பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் அந்த பார்வையை மிக தீவிரமாக திருப்பியுள்ளது.

இந்தநிலையில் மத்திய அரசாங்கத்தின் நேரடி வரிவசூலும், மறைமுக வரிவசூலும் இலக்குக்கு மேல் கிடைத்துள்ளது. சரக்கு சேவை வரி வசூலும் சாதனை படைத்துள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி அளவும் உயர்ந்திருக்கிறது. அரசின் பொருளாதார நிலை சீரடைந்துள்ளது. ஆனால் விலைவாசி உயர்வால் மக்களின் பட்ஜெட்டில் துண்டு விழுந்து, இப்போது அது அதிகமாகிக்கொண்டே போகிறது. சில நாட்களுக்கு முன்பு, மத்திய அரசாங்கத்தின் புள்ளியியல்-திட்ட நடைமுறைப்படுத்தல் அமைச்சகம் வெளியிட்ட தரவே இதற்கு சான்றாக உள்ளது.

கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லரை பணவீக்கம் அதாவது சில்லரை விலைவாசி 6.95 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்ற அபாய மணியை அடித்துவிட்டது. மக்களால் தாங்கக்கூடிய அளவு விலைவாசி உயர்வாக 6 சதவீதத்தைத்தான் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. ஆனால் கடந்த 3 மாதங்களாக இந்த வரம்பை தொடர்ச்சியாக தாண்டி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், விவசாயிகளுக்கு பயனில்லாத நிலை இருக்கிறது. பல காய்கறிகளின் விலை, உற்பத்தி செலவுக்கு மிக மிக குறைவான விலையில் இருப்பதால், அறுவடை செலவைவிட குறைவாகத்தான் கிடைக்கிறது. மற்ற நுகர்வோர் பொருட்கள் விலையெல்லாம் உயர்ந்து விட்டது.

சில்லரை பொருட்களின் விலைவாசி உயர்வுதான் இப்படி இருக்கிறது என்றால், மொத்த விற்பனை குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் கடந்த 4 மாதங்களில் இருந்ததைவிட மிக அதிகமாக, கடந்த மார்ச் மாதத்தில் 14.55 சதவீதமாக இருப்பது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. கடந்த 12 மாதங்களாக தொடர்ச்சியாக இந்த விலைவாசி உயர்வு 10 சதவீதத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பெட்ரோல்- டீசல் போன்ற எரிபொருட்கள் விலை உயர்வுதான். இது மட்டுமல்லாமல், மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. தொழில் நிறுவனங்களுக்கு மூலப்பொருட்களின் விலை உயர்ந்து விட்டதால், உற்பத்தி பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. மொத்த விலைவாசி உயர்வை கடந்த நிதி ஆண்டு, அதாவது 2021-2022 முழுமையும் கணக்கிட்டால் 12.96 சதவீதமாக இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகள் இல்லாத அளவு இந்த விலைவாசி உயர்வு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதை மக்களால், குறிப்பாக ஏழை - எளிய மக்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது. எனவே ரிசர்வ் வங்கி உடனடியாக அனைத்து சேமிப்புகளுக்குமான வட்டியை, முன் ஆண்டுகள் போட்ட சேமிப்புகளுக்கும் சேர்த்து உயர்த்த வேண்டும். மத்திய அரசாங்கமும் விலைவாசி உயர்வை குறைப்பதை முன்னுரிமை அடிப்படையில் கடமையாக கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று, விலைவாசியை தாங்க முடியாத மக்கள் கேட்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com