லஞ்சம் இல்லாத அரசு அலுவலகங்கள்..!

புதியதோர் தமிழகத்தை அதாவது, ஊழலில்லாத, லஞ்சம் இல்லாத சாம்ராஜ்யத்தை நாம் எல்லோரும் சேர்ந்து கட்டியெழுப்புவோம்.
லஞ்சம் இல்லாத அரசு அலுவலகங்கள்..!
Published on

முதல்-அமைச்சர் விஜய் தேர்தலுக்கு முன்பே தான் வெற்றி பெற்றால் லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சி அமைப்பேன். எனது அரசில் எல்லாமே வெளிப்படைத் தன்மையாக இருக்கும் என்று திரும்ப திரும்ப உறுதி அளித்ததும், அவரது வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. மக்கள் லஞ்சத்தை எவ்வளவு வெறுத்து கொண்டிருந்திருக்கிறார்கள், மற்ற வாக்குறுதிகளைவிட லஞ்சம் இல்லாத தமிழ்நாடு வேண்டும் என்பதில்தான் அவர்களின் ஆசை இருந்துள்ளது என்பது தேர்தல் முடிவுகளில் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

காமராஜர் வழி

தேர்தல் அறிக்கையில்கூட ஊழல் கலாசாரத்துக்கு மிகவும் சக்திவாய்ந்த சித்தாந்தமாக இருந்த காமராஜரின் நேர்மையான நிர்வாகமே நமது நேர்கோட்டு சித்தாந்தம் என்று கூறியிருந்ததோடு, காமராஜர் வழிதான் தன்னுடைய வழியாக இருக்கும் என்பதை கோடிட்டுக்காட்டியிருந்தார்.

ஒரு பைசாகூட தொடமாட்டோம்

இதுமட்டுமல்லாமல் லஞ்சத்துக்கு எதிராக 'ஜீரோ' சகிப்புத்தன்மையுடன் அரசு செயல்படும் என்று உறுதியளித்து லஞ்சத்துக்கு எதிரான தனது அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு வாக்குறுதியும் அளித்திருந்தார். அதன்பிறகு பதவியேற்றவுடன் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் பேசும்போது, 'மக்கள் பணத்தில் ஒரு பைசாகூட தொடமாட்டோம், தொடவும் விடமாட்டோம், தொட்டால் விடமாட்டோம், இதற்கு முன்பு தொட்டவர்களையும் விடமாட்டோம்' என்று ஆக்ரோஷத்துடன் பேசினார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

அதன் பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்கள் சாட்டையை எடுத்து சுழற்றத்தொடங்கிவிட்டார்கள். மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், சோதனைச்சாவடிகள் என அனைத்து அலுவலகங்களிலும் எப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவார்கள்? என்று தெரியாத அளவில் திடீர் திடீரென அதிரடி சோதனைகள் நடந்தன. இதனால் நேர்மையான அரசு ஊழியர்களுக்கு உற்சாகமும், கறைப்படிந்த கரங்களுக்கு நடுக்கமும் ஏற்படத் தொடங்கியது.

ரூ.22.33 லட்சம் பறிமுதல்

ஊழலுக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய் வீசிய வலையில் கடந்த ஒரேவாரத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ரூ.22.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனைகள் வரும் நாட்களில் தொடரப்போகிறது. லஞ்சம் வாங்கி மாட்டிக்கொள்வதைவிட வேலையை காப்பாற்றி கொள்வதே சாலச்சிறந்தது என்ற பயம் அரசுத்துறை வட்டாரங்களில் ஆழப்பதிந்துவிட்டது.

தூய்மையான நிர்வாகம்

பல அரசு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு கொண்டிருப்பதால் அதில் அனுமதி வழங்கிய அதிகாரிகளும் இப்போது மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். அரசு அலுவலகங்களில் நேர்மை எனும் வாசனை வீசத்தொடங்கிவிட்டது. இதேநிலை எப்போதும் தமிழ்நாட்டில் நீடிக்கவேண்டும், அரசு அலுவலகங்களில் தூய்மையான நிர்வாகம் தழைத்தோங்கவேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எங்கள் விஜய்யோட ஆட்சி

இதற்கு நம்பிக்கையூட்டும் விதமாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கரூரில் நடந்த கூட்டத்தில், "லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கவே முடியாது என்று கூறியவர்கள், இப்போது எந்த அரசு அலுவலகத்துக்கும் சென்று பார்க்கலாம். ஒரு பைசா லஞ்சம் இல்லாமல் வேலைகள் உடனுக்குடன் நடக்கின்றன. உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்கமுடியாது என்று சொல்லுங்கள். உங்களுடன் நான் இருக்கிறேன். இதை மீறி யாராவது கட்டாயப்படுத்தினால் இது எங்க மகன், எங்க பிள்ளை, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜய், எங்கள் விஜய்யோட ஆட்சி என்று உறுதியாக சொல்லுங்க மக்களே..." என்று லஞ்ச ஊழலுக்கு முதல்-அமைச்சர் என்ற முறையில் எச்சரிக்கை மணி அடித்துவிட்டார்.

லஞ்சம் இல்லாத சாம்ராஜ்யம்

இனி மக்களும் எந்த அலுவலகத்திலும் லஞ்சம் கொடுக்கக்கூடாது. அரசு ஊழியர்களும் நமக்குத்தான் நல்ல சம்பளம் கிடைக்கிறதே, நாம் ஏன் கைநீட்ட வேண்டும்? என்ற எண்ணத்தோடு பணியாற்ற வேண்டும். புதியதோர் தமிழகத்தை அதாவது, ஊழலில்லாத, லஞ்சம் இல்லாத சாம்ராஜ்யத்தை நாம் எல்லோரும் சேர்ந்து கட்டியெழுப்புவோம் என்பதே நல்லோரின் ஆசையாக இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com