பெருந்துயரை அளிக்கும் பிபின் ராவத் மரணம்

“சரித்திரம் திரும்புகிறது” என்பார்கள். அது, இந்திய முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் வாழ்க்கையிலேயே திரும்பிவிட்டது.
பெருந்துயரை அளிக்கும் பிபின் ராவத் மரணம்
Published on

சரித்திரம் திரும்புகிறது என்பார்கள். அது, இந்திய முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் வாழ்க்கையிலேயே திரும்பிவிட்டது. 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிபின் ராவத் லெப்டினென்ட் ஜெனரலாக இருந்த நேரம். அப்போது, நாகாலாந்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட சீட்டா ரக ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். ஹெலிகாப்டர் உயர பறக்கத் தொடங்கிய உடனேயே கீழே விழுந்து நெறுங்கியது. அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பிபின் ராவத் உயிர் தப்பினார்.

அவரிடம் சக அதிகாரிகள் கேட்டபோது, நான் மலைப்பிரதேசத்தில் இருந்து வந்தவன். இதுபோன்ற சின்ன விபத்துகளில் நான் உயிரிழக்க மாட்டேன் என்று சொன்னவர், தன் கண்ணை சிமிட்டிக்கொண்டே, எதற்கும் பயப்படாத கூர்க்கா ரைபிள் படைப்பிரிவை சேர்ந்தவன் நான். உத்தரகாண்ட் மக்கள் அச்சப்படாதவர்கள் என்ற பெயரை பெற்றவர்கள் என்று மிடுக்காக சொன்னார். அன்று உயிர் தப்பிய பிபின் ராவத், இப்போது முப்படையின் தலைமை தளபதியாக பதவி வகித்த நேரத்தில், தனது மனைவி மற்றும் 11 பேருடன் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்திருக்கிறார்.

பிபின் ராவத் குடும்பமே பல தலைமுறைகளாக ராணுவக் குடும்பமாகும். 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய ராணுவத்தில் பல்வேறு பதவிகளில் பிபின் ராவத் சிறப்பாக பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி இந்தியாவின் முதல் முப்படை தளபதியாக பொறுப்பேற்றார். நாட்டின் முப்படைகளையும் நவீனமயமாக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்டவர். அந்த பதவிக்கே ஒரு இலக்கணமாய் திகழ்ந்து கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில், குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில், பயிற்சி பெற்றவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்காக வந்தபோதுதான் இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், அவரை வரவேற்று அழைத்துச்செல்ல வந்த வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி குரூப் கேப்டன் வருண்சிங் மட்டும் 80 சதவீத காயங்களுடன் உயிர் தப்பி, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் நவீன வசதிகளை கொண்டது. உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது. ரஷியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரை, நம்பிக்கைக்குரிய பறவை என்றே நிபுணர்கள் அழைப்பார்கள்.

பிபின் ராவத் மறைவு மட்டுமல்லாமல், அவருடன் பயணம் செய்து மறைந்த 11 அதிகாரிகளின் இழப்பும் ஈடுசெய்ய முடியாததாகும். அவர்களும் தங்கள் பணியில் முத்திரை பதித்து இந்த நிலைக்கு உயர்ந்தவர்கள். அந்த வகையில், எல்லோருடைய மறைவுக்கும் நாடு வீர வணக்கம் செலுத்துகிறது.

ஹெலிகாப்டரில் உள்ள கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் ஹெலிகாப்டரில் இருந்தவர்களின் பேச்சு அதில் பதிவாகியிருக்கும். அதை ஆய்வு செய்த பிறகும், ராணுவ விசாரணைக்கு பிறகும்தான் இந்த விபத்துக்கு என்ன காரணம்? என்பது தெளிவாக தெரியும். இதுவரை பல ஹெலிகாப்டர் விபத்துகளில் அரிய உயிர்கள் பலவற்றை இழந்த சூழ்நிலையில், இனிமேலும் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விபத்து சம்பவத்தை பற்றி கேள்விப்பட்ட உடனேயே சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி கவர்னர் பொறுப்பு வகிக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தியது அனைவரின் மனதையும் நெகிழவைக்கிறது. பார்வையாளர் புத்தகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாய் திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிர் இழந்ததற்கு நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன் என்று கைப்பட எழுதியுள்ளார். இதுவே தமிழக மக்கள் அவர்கள் அனைவருக்கும் செலுத்தும் அஞ்சலியாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com