தலையங்கம்: சுங்கச்சாவடியில் இனி காத்திருக்க வேண்டாம்

சுங்கச்சாவடியை கடக்கும்போது தானாகவே கட்டணம் 'பாஸ்டேக்' கணக்கில் இருந்து கழிக்கப்பட்டுவிடும்.
தலையங்கம்: சுங்கச்சாவடியில் இனி காத்திருக்க வேண்டாம்
Published on: 

காலத்தின் வேகமான சுழற்சியில் 4 வழி, 6 வழி என நெடுஞ்சாலைகள் விரிந்து, தடங்கலற்ற பயணத்தின் இனிமையை வாகன ஓட்டிகளுக்கு வழங்குகின்றன. அந்த வசதியோடு அரசு கொண்டு வந்த சுங்கச்சாவடிகளும் கூடவே வந்து ஒட்டிக்கொண்டன. இதனால் விரைவான பயணத்தின் வாசலிலேயே, கடிவாளம் போடப்பட்டு வாகனங்கள் வரிசைகட்டி வெகுநேரமாக காத்திருப்பது தொடர்கதையாக மாறிப்போனது. இந்தியாவில் 1851-ம் ஆண்டு இந்திய சுங்கச்சட்டம் இயற்றப்பட்டு. பொதுச்சாலைகள், பாலங்களில் சுங்கம் வசூலிப்பதற்கான சட்டநடைமுறை அமலானது. அந்தவகையில், தற்போது நாடு முழுவதும் வளைந்து, நெளிந்து போகும் சுமார் 1,46,195 கி.மீ. தூர தேசியநெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.3.25 லட்சம் கோடிக்குமேல் சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சுங்கக்கட்டணத்தில் அதிக வருவாயை அள்ளித்தரும் மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது.'தங்கநாற்கர சாலைத்திட்டத்தை' மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடங்கிவைத்த பிறகே சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகமானது. ஆரம்பத்தில், சுங்கச்சாவடிகளில் நேரில் பணம்செலுத்தி செல்ல வாகனங்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அதன்பின்னர், 2016-ல் வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு. டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் கட்டணம் செலுத்தும்முறை காலடி எடுத்துவைத்தது. தற்போது 98 சதவீத வாகனங்கள் 'பாஸ்டேக்' முறை மூலமாகவே கட்டணத்தை செலுத்திவருகின்றன. இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நேரம் குறைந்தாலும், இன்னமும் அதற்கு முழுமையாக முடிவுரை எழுதமுடியவில்லை.

இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்நோக்கில், 'மல்டிலேன் பிரீ புலோ டெக்னாலஜி' எனும் அதிநவீன தானியங்கி சுங்கக்கட்டண முறை வந்துள்ளது. நாடு முழுவதும் 6 இடங்களில் நடைமுறைக்கு வந்துள்ள இந்த தொழில்நுட்பம், தமிழ்நாட்டில் பரனூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிகளில் செயல்பட தொடங்கியுள்ளது. வழக்கமாக இந்த சுங்கச்சாவடிகளில் பண்டிகைக்காலங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்க, அதைக் கடப்பதே பெரும் சவாலாக இருக்கும். ஆனால் இப்போது, அங்கிருந்த தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. அதற்கு பதிலாக, 6 வழிச்சாலைகளின் மேலே அமைக்கப்பட்டுள்ள இரும்புத்தடுப்புகளில், அதிநவீன வாகனப்பதிவெண் கண்டறியும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ரேடார் கருவிகள், வாகனங்களை நிகழ் நேரத்தில் துல்லியமாக கண்காணிக்கின்றன.

வாகனங்கள் 'பிரேக்' அடிக்கவேண்டிய அவசியமே இல்லாமல், அதேவேகத்தில் பயணிக்கும்போதே தானாகவே கட்டணம் 'பாஸ்டேக்' கணக்கில் இருந்து கழிக்கப்பட்டுவிடும். ஒருவேளை பாஸ்டேக்கில் பணம் இல்லாமலோ அல்லது பாஸ்டேக் ஒட்டப்படாமலோ வாகனம் கடந்துசென்றால், வாகனத்தின் பதிவெண் கண்டறியப்பட்டு, உரிமையாளரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக எச்சரிக்கை சென்றுவிடும். அவர் உடனடியாக கட்டணத்தை செலுத்தவேண்டும். தவறினால், பாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்யவே முடியாது. மேலும் நாட்டின் எந்த சுங்கச்சாவடியையும் அந்த வாகனம் கடக்கவும் முடியாது. தடைக்கு விடை கொடுக்கும் இந்த புரட்சிகரமான தொழில்நுட்பத்தை, நாட்டின் பிற சுங்கச்சாவடிகளிலும் விரைவில் அமல்படுத்தவேண்டும். அப்படி செய்தால், வெளிநாடுகளில் மட்டுமே சாத்தியமாகி வந்த இந்த அற்புத தொழில்நுட்பத்தால், இனி சுங்கச்சாவடிகளில் காத்திருக்கவேண்டிய அவசியமே இல்லாமல், வந்த வேகத்திலேயே வாகனங்கள் கடந்து செல்லலாம். இதனால் பயணநோமும் இனி பாதியாக குறையும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com