

"கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு" என்று பாடினார் மகாகவி பாரதியார் அன்று. அவர் கண்ட கனவுப்படி இன்று தமிழ்நாட்டில் கல்வி மணம் வீசிக் கொண்டு இருக்கிறது.
இதற்கு தமிழ்நாட்டில் அரசு அமைத்த முதல்-அமைச்சர்கள்தான் காரணம். கல்விக்கு நல்ல அடித்தளம் அமைய காரணமாக இருந்தவர் கல்விக்கண் திறந்த காமராஜர் அவர் பள்ளி இல்லாத கிராமமே இருக்கக்கூடாது என்ற லட்சியத்தின்படி ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் இருக்க வேண்டும் என்பதற்கான விதையை விதைத்தார்.
என்ஜினீயரிங் கல்லூரிகள் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்த நிலையில் தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு படிக்க செல்லும் நிலை இருந்தது. இதனை பார்த்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தனியார் தாராளமாக என்ஜினீயரிங் கல்லூரிகளைத் தொடங்கும் வகையில் விதிகளைத் தளர்த்தினார். இதனால்தான் இன்று தமிழ்நாட்டில் 417 என்ஜினீயரிங் கல்லூரிகள் இருக்கின்றன.
தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் என்ஜினீயரிங் படிக்க தமிழ்நாட்டைத் தேடி வரும் நிலை இருக்கிறது. அதுபோல முதல்-அமைச்சர்களாக இருந்த கருணாநிதியும், ஜெயலலிதாவும் எடுத்த நல்ல முயற்சிகள்தான் உயர்கல்வியில் அதிக மாணவர்கள் சேர்வதற்கான வழிகளை திறந்தது. இப்போது தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான மாணவர்களும், மாணவிகளும் உயர்படிப்புக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற பல நாடுகளுக்கு செல்வதைப் பார்க்க முடிகிறது.
அகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் இருந்துதான் கணிசமான எண்ணிக்கையில் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். தமிழக மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலையை மாற்றும் வகையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தங்கள் வளாகங்களை அமைக்கவேண்டும் என்பதற்கான முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.
இதற்கு மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையும் அடித்தளமிட்டது. இப்படி பல்வேறு கூட்டு முயற்சிகளின் விளைவாக ஆஸ்திரேலியாவில் 110 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் முன்னணி பல்கலைக்கழகமும், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட முதல் 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றுமான வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தனது வளாகத்தை சென்னை வேளச்சேரியில் தொடங்கியுள்ளது.
இந்த பல்கலைக்கழக வளாகத்தில் வணிக மேலாண்மை, கணினி அறிவியல், தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு சார்ந்த மேம்பட்ட கணினி அறிவியல் ஆகிய இளங்கலை படிப்புகளும் தகவல் தொழில்நுட்பம், வணிக நிர்வாகம் ஆகிய முதுகலை பட்டப்படிப்புகளும் இருக்கின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடந்து வருகிறது.
வருகிற 19-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த பல்கலைக்கழகத்தில் ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு மாணவர்களுக்கு நிகரான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.14 லட்சம் முதல் ரூ.23 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு கல்லூரிகள் ஆசிரியர் சங்கம் கூறியிருக்கிறது.
இது அதிக கட்டணம் என்றாலும், உறவுகளை விட்டுவிட்டு, கண்டங்கள் கடந்து பறந்து சென்று வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்புகிறவர்களுக்கு அந்த கல்வியை கைக்கு எட்டும் தூரத்தில் கொண்டுவந்து சேர்ப்பதாக இருக்கிறது. தரமான கல்வியை கொண்டுவந்துள்ளதால் இதை வரவேற்கத்தான் செய்யவேண்டும். தரமான கல்விக்கு கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டியது இருக்கும். ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தை தொடர்ந்து மேலும் பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் அடுத்தடுத்து வந்து தடம் பதிக்க இருக்கிறது.