

மனிதகுலம் கடந்த காலங்களில் சந்தித்த நிகழ்வுகளை நம்பத்தகுந்த ஆதாரங்களின் மூலம் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவதுதான் வரலாறு. செத்தவர்களின் கதைதான் வரலாறு என்று சிலர் வேடிக்கையாக சொல்லுவார்கள். வரலாறு எப்போதும் நினைவுகூரத்தக்கது. வரலாற்றுச் சின்னங்களையும், அதை உருவாக்கியவர்களையும் சமூகம் ஒருபோதும் மறக்கக்கூடாது. அதை தகுந்தமுறையில் பராமரிப்பதன் மூலம் பழைய காலத்தின் சிறப்புகளை அறிந்துகொள்ளமுடியும். பழமையான கட்டிடங்கள் பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு ஓங்கி வளர்ந்து நிற்பதை பார்த்தால், அதை கட்டுவதற்கு அவர்கள் என்னென்ன கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி இருப்பார்கள்? என்பதையெல்லாம் ஆய்வு செய்து தெரிந்துகொள்ள முடியும். வரலாற்றுச் சின்னங்களை உருவாக்கியவர்களை போற்றி புகழ்வது நமது பண்பாடாக இருக்கிறது.
அந்த வகையில்தான். பெரியாறு ஆற்றின் குறுக்கே தன் சொந்த பணத்தை வைத்து முல்லைப்பெரியாறு அணையை கட்டி, 5 மாவட்ட மக்களின் வறட்சியை போக்கி பாலைவனத்தை சோலைவனமாக்கினார் ஆங்கிலேய என்ஜினீயர் பென்னி குயிக். இதற்காக அங்குள்ள மக்கள் இன்றும் அவரை தெய்வமாக வழிபட்டு, அவருக்கு பொங்கலிடும் காட்சிகளை காணலாம். நன்றிக்கடன் செலுத்தும் விதமாக பல தலைமுறைகளைத் தாண்டியும் பலர் தங்கள் குழந்தைகளுக்கு பென்னி குயிக் என்று பெயர் சூட்டி மகிழ்வதைப் பார்க்கமுடிகிறது. பென்னி குயிக் கட்டிய அணை அருகே அவரது சிலையை தமிழக அரசு நிறுவியுள்ளது. அதுபோல இந்தியாவின் வரலாற்று பொக்கிஷங்களை சுமந்து நிற்கிறது டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை. உலகமே வியந்து பார்க்கும் இந்த மாளிகை, சுமார் 330 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், 5 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது.
அதில், 340 அறைகள் இருக்கின்றன. 17 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட இந்த மாளிகை இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனை, அமெரிக்க வெள்ளை மாளிகை, ரஷியாவின் கிரெம்லின் மாளிகை போன்ற உலகின் சிறந்த மாளிகைகளை விட மிகப் பிரமாண்டமானது. அங்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் அனைவரும் அதன் வனப்பைக் கண்டு மெய் மறந்துவிடுகின்றனர். இதை கட்டியவர் ஆங்கிலேயரான எட்வின் லுட்யன்ஸ். அவர் மிகச்சிறந்த கட்டிடக்கலை நிபுணர் என்பதற்கு அவர் கட்டிய கட்டிடங்களே சாட்சி. அவர் ஜனாதிபதி மாளிகை மட்டுமல்ல, உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வந்தால் பேச்சுவார்த்தை நடைபெறும் டெல்லி ஐதராபாத் ஹவுஸ், டெல்லியில் உள்ள இந்தியா கேட் போன்ற பல பாரம்பரியமிக்க வரலாற்றுச் சின்னங்களையும் கலை நயத்துடன் செதுக்கியிருக்கிறார்.
அவரை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதி மாளிகையில் அவரது மார்பளவு சிலை வைக்கப்பட்டிருந்தது. அதை பார்ப்பவர்கள் "இந்த அழகிய மாளிகைக்கு உயிர் கொடுத்தது இவர்தானா?" என்று அவருக்கும் மரியாதை செலுத்தி வந்தார்கள். ஆனால் இப்போது திடீரென்று அவரது சிலையை எடுத்துவிட்டு, இந்தியாவின் முதல் வைசிராய் ஜெனரலான ராஜாஜியின் மார்பளவு சிலை அந்த இடத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது தவறில்லை என்றாலும், ஒரு சிலையை அகற்றிவிட்டு தான் ராஜாஜி சிலையை அந்த இடத்தில் வைக்கவேண்டுமா? எட்வின் லுட்யன்ஸ் ஆங்கிலேய ஆட்சியாளரோ, அரசியல்வாதியோ, அதிகாரியோ இல்லை. அவர் ஒரு கட்டிடக் கலைஞர். அவருடைய சிலையை இவ்வளவு காலத்துக்கு பிறகு அப்புறப்படுத்தியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் சிலையை மியூசியத்தில் வைத்திருக்கிறோம் என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்தாலும், அந்த சிலையை அகற்றியது தேவையா? என்ற கேள்வி பலரது மனக்குகையில் இருந்து எழுகிறது.