உடனடி தேவை சாதிவாரி கணக்கெடுப்பு!

9-ம் நூற்றாண்டுக்கு பின் வாழ்ந்த தமிழ் மூதாட்டி அவ்வையார் எழுதிய நல்வழியில், இப்போது சமுதாயம் பின்பற்ற வேண்டிய ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
உடனடி தேவை சாதிவாரி கணக்கெடுப்பு!
Published on

9-ம் நூற்றாண்டுக்கு பின் வாழ்ந்த தமிழ் மூதாட்டி அவ்வையார் எழுதிய நல்வழியில், இப்போது சமுதாயம் பின்பற்ற வேண்டிய ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தியுள்ளார். சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, இந்த பூவுலகில் சாதிகள் இரண்டே இரண்டுதான். இவ்விரண்டைத்தவிர வேறு சாதிகள் இல்லை. நீதி தவறாது நல்வழியில் நின்று, வறுமையில் உள்ளவர்களுக்கும், இயலாதோருக்கும், முதியோருக்கும் ஈகைமனம் கொண்டு முறையோடு உதவிசெய்வோர் உயர் சாதியினர். பசிக்கிறது என்று வருபவர்களுக்கு வயிற்றுக்கு உணவுகூட தராத, உதவிசெய்ய மனம் இல்லாதவர்கள் இழிந்த சாதியினர் என்பதுதான் அதன் பொருள். பாரதியார் கூட, சாதிகள் இல்லையடி பாப்பா என்றுதான், பச்சிளம் குழந்தைகளின் மனதிலேயே விதைக்கும் பாட்டை பாடினார்.

ஆனால், தமிழ்நாட்டில், இந்த 2 சாதிகளை பற்றிய பொருளுக்கு அர்த்தமே இல்லாமல், ஏராளமான சாதிகள் இருக்கின்றன. சாதிகளுக்குள் உள்ள பிரிவினைகள், மோதல்கள் என்று பல வேண்டத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன. சாதிகள் இருப்பதால்தான் சமூக நீதிகாக்க இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டது. இப்போது எல்லா சாதிகளும், நாங்கள் இவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறோம், எங்களுக்கு இவ்வளவு இடஒதுக்கீடு வேண்டும் என்று குரல் எழுப்ப தொடங்கிவிட்டன.

சமீபத்தில், தமிழக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினருக்குள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில், சில குறிப்பிட்ட சாதி பிரிவுகளை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு 7 சதவீதமும் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், மற்ற சாதி பிரிவுகளுக்கு 2.5 சதவீதமும் ஆகிய 3 உட்பிரிவுகளுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, எல்லா சாதியினரும் எங்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பத் தொடங்கிவிட்டனர். எனவே, இத்தகைய சூழ்நிலையில் ஒவ்வொரு சாதிக்கும் எவ்வளவு மக்கள்தொகை இருக்கிறது? என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அரசின் தலையாய கடமையாகிவிட்டது. இப்போது, சாதி வாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவுசெய்து, அதை திரட்டி அரசுக்கு அறிக்கையளிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில், தமிழ்நாட்டில் சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் ஆணையம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையம் சாதிவாரியான புள்ளி விவரங்களை தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், விரைவில் கணக்கெடுப்பு நடத்துவதற்கான பரிந்துரைகளையும் வழங்கவேண்டும் என்பதே எல்லோருடைய கோரிக்கையாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கு முன்பு மத்திய அரசாங்கம் 2011-ம் ஆண்டு எடுத்த சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள விவரங்களை கேட்டுப்பெறவேண்டும். 2011-ம் ஆண்டு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகமும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகமும் இணைந்து அனைத்து கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் எடுத்த சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பில், அந்த விவரங்கள் மட்டும் வெளியிடப்படவில்லை. இதை கொள்கை முடிவாக மத்திய அரசாங்கம் வெளியிடாமல் வைத்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு, உடனடியாக தமிழ்நாட்டுக்கான சாதிவாரி கணக்கெடுப்புகளை மட்டும் மத்திய அரசாங்கத்திடம் தமிழக அரசு கேட்டுப்பெறவேண்டும். அப்படி மத்திய அரசாங்கம் தரவில்லை என்றால், தமிழ்நாட்டில் மட்டும் சாதிவாரியான கணக்கெடுப்புகளை விரைந்து நடத்தி, கேரளாவில் 8 தொகுப்புகளாக பல்வேறு சாதிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடுபோல, தமிழ்நாட்டிலும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை, அடுத்து ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சி முன்னுரிமை கொடுத்து மேற்கொள்ளவேண்டும் என்பதே, எங்களுக்கும் இடஒதுக்கீடுவேண்டும் என்று கேட்கும் அனைத்து சாதியினரின் கோரிக்கையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com