அடுப்பங்கரைக்குள் வந்துவிட்ட ஈரான் போர்

போர் பதற்றம் நீடிப்பதால் இந்தியாவில் விலைவாசி உயர்வும், எரிபொருள் தட்டுப்பாடும் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அடுப்பங்கரைக்குள் வந்துவிட்ட ஈரான் போர்
Published on

அமெரிக்காவுக்கு சளைத்தது அல்ல என்று பிரகடனப்படுத்தும் வகையில் ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அந்நாட்டு ராணுவ தளங்கள் மீதும் ஈரான் போர் முரசு கொட்டி வருகிறது. இதுமட்டுமல்லாமல், பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்மோஸ் ஜலசந்தி என்று கூறப்படும் நீரிணை வழியாக எந்த நாட்டு கப்பலும் செல்ல முடியாத வகையில் ஈரான் தடை விதித்துவிட்டது. இதனால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அந்த வழியாக வரும் கப்பல்கள் மூலம்தான் நமக்கு பெரும்பாலான கடல்சார்ந்த வணிகம் நடக்கிறது. அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சமையல் கியாஸ் உள்ளிட்டவை இந்த பாதை வழியாகத்தான் கொண்டுவரப்பட்டது.

Also Read
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அறிவிப்பு
அடுப்பங்கரைக்குள் வந்துவிட்ட ஈரான் போர்

இந்தியாவிடம் 75 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு இருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருந்தாலும், நீண்டகால மோதல் ஏற்பட்டால் நிலைமை இன்னும் மோசமாக மாறும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த சூழலில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு பொதுமக்களை கவலை அடையச் செய்துள்ளது. உலகம் முழுவதும் மார்ச் 8-ந்தேதி மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அந்த நாளில் பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால் அது கானல் நீர் போல பொய்த்துப்போனது. கடந்த 2024-ம் ஆண்டு மகளிர் தினத்தன்று சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Also Read
கோவை, திருப்பூர் வழியாக திருவனந்தபுரம் - சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில்
அடுப்பங்கரைக்குள் வந்துவிட்ட ஈரான் போர்

ஆனால் இந்த ஆண்டு அதற்கு மாறாக மகளிர் தினத்துக்கு ஒரு நாள் முன்பாகவே வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.868.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.928.50 என உயர்ந்துள்ளது. இதனால் குடும்ப செலவில் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதோடுமட்டும் இல்லாமல் டீக்கடைகள், ஓட்டல்களில் பயன்படுத்தும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் ரூ.114.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இந்த சிலிண்டர் விலை ரூ.2043.50 ஆக உயர்ந்து, முதன்முறையாக ரூ.2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன் தாக்கம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் எதிரொலிக்கும். டீ, காபி போன்ற பானங்களின் விலை உயர்வதும் தவிர்க்க முடியாததாகிவிடும். ஒருபக்கம் வீட்டு செலவு, மறுபக்கம் வெளியில் செலவிடும் தொகை அதிகரிப்பு என இருமுனை தாக்குதலை எதிர்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும்.

Also Read
ஆக்சன் படங்களில் நடிக்க ஆசை - நடிகை சிவாத்மிகா ராஜசேகர்
அடுப்பங்கரைக்குள் வந்துவிட்ட ஈரான் போர்

இதற்கிடையே சிலிண்டர் பதிவு செய்வதிலும் கட்டுப்பாடுகள் வரத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 21 நாட்கள் கழித்தும், 2 சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 30 நாட்கள் கழித்தும் தான் புதிய சிலிண்டருக்கு பதிவுசெய்ய முடியும். இவை அனைத்தும் நிலைமை எவ்வளவு நெருக்கடியான திசை நோக்கி நகர்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறது. போர் பதற்றம் நீடிப்பதால் இந்தியாவில் விலைவாசி உயர்வும், எரிபொருள் தட்டுப்பாடும் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான அறிகுறியாகவே சமையல் கியாசை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. மத்திய கிழக்கில் பற்றி எரியும் தீ அணைந்தால்தான், இந்தியாவில் இல்லத்தரசிகள் அடுப்பங்கரையில் உலையை நிம்மதியாக பற்றவைக்கமுடியும். இதனை அரசும், பொதுமக்களும் கவனத்தில் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com