பங்குச்சந்தையில் ஜியோவின் மகத்தான சாதனை

ஆகஸ்டு மாத நிலவரப்படி 53.8 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட மிகப்பெரிய நிறுவனமாக ஜியோ வளர்ந்துள்ளது.
பங்குச்சந்தையில் ஜியோவின் மகத்தான சாதனை
Published on: 

"செய்யும் தொழிலே தெய்வம்; அந்தத் திறமைதான் நமது செல்வம்" என்ற எண்ணத்துடன் வாழ்ந்தவர் தொழிலதிபர் திருபாய் அம்பானி. குஜராத்தின் ஒரு குக்கிராமத்தில் பள்ளி ஆசிரியரின் மகனாக பிறந்த அவர், கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் “ரிலையன்ஸ்" என்ற பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். திருபாய் அம்பானி ஆரம்பத்தில் நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியஸ்டர் நூல் வியாபாரத்தில் ஈடுபட்டார். அடுத்து விமல் என்ற பெயரில் ஜவுளி ஆலையைத் தொடங்கினார்.

தொடர்ந்து பெட்ரோலிய சுத்திகரிப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறைகளில் கால் பதித்தார். அடுத்து அவருடைய மகன் முகேஷ் அம்பானியும், 'அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறார்' என்பதற்கேற்ப தந்தையின் வழியில் முத்திரை பதித்தார். அவர் நிர்வாகத்தில் தலைமை பொறுப்பு வகித்தபோதுதான் குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாக உருவெடுத்தது.

இந்த நிறுவனத்தின் வளர்ச்சி பயணத்தில், முக்கிய திருப்பமாக அமைந்தது ஜியோவின் தொடக்கம். அமெரிக்காவின் 'யேல்' பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, விடுமுறையில் மும்பை வந்தபோது, இணையதள வேகம் குறைவாக இருந்ததால் கல்லூரி பாடப்பணியை சமர்ப்பிக்க சிரமப்பட்டார். அப்போது, அமெரிக்காவில் கிடைக்கும் வேகமான இணையதள வசதி இந்தியாவில் ஏன் கிடைப்பதில்லை? என அவர் மனக்குகையில் இருந்து எழுந்த கேள்விதான் ஜியோ நிறுவனம் உருவாக காரணமாக அமைந்தது என்று முகேஷ் அம்பானி 2018-ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார். கடந்த 2016-ம் ஆண்டு வணிக சேவையை தொடங்கிய ஜியோ. இலவச அழைப்புகள், குறைந்த 'இன்டர்நெட்' கட்டணம் என இந்திய தொலைத்தொடர்புத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இது கடந்த ஆகஸ்டு மாத நிலவரப்படி 53.8 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.

இந்த வளர்ச்சியின் மற்றொரு முக்கிய மைல்கல்லாக 'ஜியோ பிளாட்பார்ம்ஸ்' நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு அமைந்துள்ளது. ரூ.30,213 கோடி திரட்டும் நோக்கில் 27 கோடி புதிய பங்குகளை வெளியிட்ட இந்த நிறுவனம். ஒரு பங்கின் விலையை ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிர்ணயித்தது. கடந்த 21-ந்தேதி தொடங்கிய ஜியோவின் பொதுப்பங்கு வெளியீட்டில், முதல் 100 நிமிடங்களிலேயே திரட்டத் திட்டமிட்ட தொகைக்கு விண்ணப்பங்கள் கிடைத்துவிட்டன. பங்கு வெளியீடு முடிவடைந்தபோது. ஒதுக்கப்பட்ட பங்குகளைவிட 22.19 மடங்கு அதிகமாக, ரூ.7.5 லட்சம் கோடி மதிப்புக்கு 1.38 கோடிக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. உலகளவில் ஒரு கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்களை பெற்ற முதல் பொதுப்பங்கு வெளியீடு என்ற பெருமையை ஜியோ பெற்றுள்ளது. அதாவது. பொதுப்பங்கு வெளியீடு சாதனைகளை ஜியோ முறியடித்திருக்கிறது.

' இந்த பங்கு விற்பனை தொடங்கப்பட்ட நேரத்தில் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி, ‘இதன்மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு அனைத்து வங்கிக்கடன்களும் முழுமையாகத் தீர்க்கப்பட்டு ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம் வங்கிக்கடன் இல்லாத நிறுவனமாக உருவெடுக்கும். கடன்களை தீர்த்தது போக மீதி தொகை இந்த நிறுவனத்தின் மற்ற பொதுசெலவுகளுக்காக பயன்படுத்தப்படும்' என்று கூறியிருந்தார். 'ஜியோ பிளாட்பார்ம்ஸ்' நிறுவனத்தின் பங்குகள் வருகிற 28-ந் தேதி பட்டியலிடப்பட இருக்கின்றன. ஆக ரிலையன்ஸ் நிறுவனத்தின் வெற்றி மகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாக இந்த பங்கு வெளியீடு ஜொலித்துக்கொண்டு இருக்கிறது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com