

பழங்காலத்தில் சிறந்த நாகரிகங்கள் என்ற பட்டியலில் எகிப்து நாட்டு நாகரிகம் முதல் இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு பிரமிடுகள், கோவில்கள், மலையை குடைந்து மிகப்பெரிய கல்லறைகள் போன்றவை பிரமாண்ட அளவில் கட்டப்பட்டுள்ளன. அவையனைத்தும் இன்றும் அதேநிலையில் இருக்கின்றன என்பதே இந்த அந்தஸ்துக்கு காரணம். அதுபோல இந்தியாவில் உள்ள சிந்துசமவெளி நாகரிகமும் பழங்காலத்திய சிறந்த நாகரிகமாக போற்றப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் அழகிய வீடுகள், தெருக்கள், கழிவறை கால்வாய்கள், குளிக்கும் இடங்கள் போன்றவற்றை அமைத்து நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றாதாரங்கள் அவர்கள் கட்டிய அந்த அமைப்புகளின் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன. இதனால் சிந்துசமவெளி நாகரிகமும் போற்றப்படுகிறது.
எகிப்து நாகரிகத்துக்கும், சிந்துசமவெளி நாகரிகத்துக்கும் முந்தையது தமிழர்களின் நாகரிகம் என்று ஆண்டாண்டுகாலமாக தமிழ்சமுதாயம் உரக்கச்சொல்லி வந்தாலும், அதை நிரூபிப்பதற்கு தேவையான சான்றுகள் சமர்ப்பிக்கப்படாததால் அதனை உலகஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த பெருங்குறையை மதுரையையொட்டிய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் நடந்த தொல்லியல் ஆய்வுகள் தீர்த்துவைத்தது மட்டுமல்லாமல், தமிழர் நாகரிகம் மிகவும் பழமையானது என்று பறைசாற்றியது. அப்போது தென்னிந்திய தொல்பொருள் இலாகாவின் கண்காணிப்பாளராக இருந்த கே.அமர்நாத் ராமகிருஷ்ணன் குழுவினர் கீழடியை சல்லடைப்போட்டு ஆராய்ந்து தமிழர் நாகரிகத்தை, வரலாற்றில் தேடும்பணியில் முழுமூச்சாக இறங்கினார்கள். மதுரை மண்ணின் சொந்தக்காரரான கே.அமர்நாத் ராமகிருஷ்ணனுடன், துணைகண்காணிப்பாளரான திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ராஜேஷ், சேலம் மாவட்டத்தைச்சேர்ந்த என்.வீரராகவன் ஆகியோர் கொண்ட குழுவினர் 102 குழிகளைத்தோண்டி ஆய்வுநடத்தி, அந்த காலத்து தமிழர்கள் பயன்படுத்திய 5,800 தொல்பொருட்களை கண்டெடுத்தனர். அங்கு காணப்பட்ட அமைப்புகள் சுமார் 2,800 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகமிக்க மக்களைக்கொண்ட ஒரு நகரம் இருந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியது.
இந்த ஆய்வுகளை 982 பக்கங்களில் தயார்செய்து அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தொல்பொருள் இலாகாவிடம் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையை தொல்பொருள் இலாகா வெளியிடவுமில்லை. மாறாக கீழடிகாலத்தை சிந்துசமவெளி நாகரிக காலத்தைவிட குறைவாக இருக்கும்வகையில் அதாவது, 500 ஆண்டுகளை குறைத்துக்காட்டச்சொல்லி அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு மத்தியஅரசாங்கம் அழுத்தம் கொடுத்தது. அதை அவர் ஏற்கமறுத்ததால் உடனடியாக நொய்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இப்போது தேசிய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் குழுமத்தின் இயக்குனராக இருக்கும் அமர்நாத் ராமகிருஷ்ணனிடம், இப்போதும் உங்கள் அறிக்கையை மாற்றம்செய்து அனுப்புங்கள் என்று தொடர்ந்து மத்தியஅரசு வலியுறுத்துகிறது. ஆனால் அவர் இதற்கு உறுதியாக மறுப்பு தெரிவித்ததோடு, "எனது மனசாட்சிப்படி உண்மையான ஆய்வுகளின் அடிப்படையில் என் ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளேன். எனது அகழாய்வில் கண்டுபிடித்த சான்றுகளின் அடிப்படையிலும், எது உண்மையோ?, எது நிரூபிக்கப்படுகிறதோ? அதை பின்பற்றித்தான் எனது அறிக்கையை தாக்கல்செய்துள்ளேன். எனவே இதை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை' என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். மேலும் இதுகுறித்து இந்தியதொல்பொருள் ஆய்வுநிறுவனத்தின் உள்குழு அறிக்கைக்கேற்ப அறிக்கையில் மாறுதல்களை செய்வோம் என்று அமர்நாத் ராமகிருஷ்ணனிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டும் இருக்கிறது. இப்போது மத்திய அரசாங்கம் இந்த தொன்மை நாகரிகம் குறித்து இருவேறு கருத்துகள் வந்துள்ள நிலையில் எது பழமையானது? சிந்துசமவெளி நாகரிகமா? தமிழர் நாகரிகமா? என்பதை வரலாற்று சான்றுகள், விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சிகளை கொண்டு எது சரியான பதிவு என்பதை வெளிப்படைத்தன்மையோடு சமுதாயத்துக்கு தெரிவிக்கவேண்டும்.