வருவாயை பெருக்கி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய பெரும் பொறுப்பு த.வெ.க.வுக்கு இருக்கிறது.
வருவாயை பெருக்கி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காதநிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு த.வெ.க. ஆட்சியமைத்துள்ளது. இனி தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய பெரும் பொறுப்பு த.வெ.க.வுக்கு இருக்கிறது.

ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் 60 வயதை எட்டும் வரை மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை, அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும். அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களின் தாயார் மற்றும் காப்பாளர் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் இரண்டு தவணைகளில் வரவு வைக்கப்படும். வறுமையில் வாடும் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். பிளஸ்-2, ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்பது உள்பட நிறைய வாக்குறுதிகள் முதல்-அமைச்சர் விஜய்யால் அறிவிக்கப்பட்டது.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சற்று அவகாசம் தாருங்கள் என்று அவர் சொன்னாலும், உடனடியாக இல்லையென்றாலும் கண்டிப்பாக நிறைவேற்றிதானே தரவேண்டும். இதையெல்லாம் நம்பித்தானே ஓட்டுப்போட்டோம் என்ற உணர்வு தமிழக மக்களிடம் குறிப்பாக பெண்கள், இளைஞர்களிடம் இருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முதல்-அமைச்சர் விஜய்க்கு மனம் இருந்தாலும், அரசின் நிதிநிலை இடம் தருமா? என்பதுதான் ஐயப்பாடாக இருக்கிறது. விஜய் அறிவித்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றினால் தமிழக மக்கள் அதிக பயனடைவார்கள். சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரும் பலனடைவார்கள். அவர்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படும். ஆனால் இந்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றினால் தமிழக அரசின் நலத்திட்டங்களுக்கான செலவு மேலும் 52 சதவீதம் அதிகரித்து, இதற்கான மொத்த ஆண்டு செலவை ரூ.1 லட்சம் கோடியாக எகிற வைத்துவிடும். இந்த செலவுகளுக்காக தேவைப்படும் வருவாயை பெருக்க நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இப்போதுள்ள நிதிப்பற்றாக்குறை 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்ந்துவிடும்.

அதை சமாளிக்க கண்டிப்பாக கடன் வாங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இப்போதே தமிழ்நாட்டின் கடன் அளவு ரூ.10.71 லட்சம் கோடியை தாண்டப்போகும் நிலையில், மேலும் கடன் வாங்கினால் இன்னும் அதிகமான வட்டி கட்டவேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் அது சாலை வசதி, துறைமுகங்கள், தொழில் கட்டமைப்பு போன்ற மூலதன செலவுகளில்தான் கைவைக்கும். எனவே அரசின் வருவாயை பெருக்கவேண்டும். அதற்காக வரிகளை கூட்டக்கூடாது. அது பொதுமக்கள் மீது சுமையை ஏற்படுத்துவது போலாகிவிடும். அதை தவிர்த்து வரியில்லாத வருவாயை பெருக்க முயற்சிகளை எடுக்கவேண்டும். அரசின் செலவுகளை கணிசமாக குறைத்து நிதி ஆதாரத்தை அதிகரிக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் விஜய் மாற்றத்தை கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்து வெற்றிப்பெற்றிருக்கிறார். அரசியலில் அவர் சொன்ன மாற்றத்தை கொண்டு வந்துவிட்டார். அரசின் நிதி நிலையில் மாற்றத்தை கொண்டுவந்து வெற்றிப்பெறுவாரா? என்பது அவர் எடுக்கும் நடவடிக்கைகளில்தான் இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com