தாய்மொழியில் உள்ள பெயர்கள்

கடவுளின் தேசமான கேரளா, இனிமேல் கேரளம் என்றே அனைவராலும் அழைக்கப்படும்.
தாய்மொழியில் உள்ள பெயர்கள்
Published on

ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சிசெய்தபோது பல மாநிலங்கள், ஊர்களின் பெயர்களை அவர்கள் உச்சரிப்பதற்கேற்றவகையில் ஆங்கிலத்தில் சூட்டினார்கள். அதை அடிப்படையாக வைத்தே அரசியல் சட்டம் எழுதப்பட்டபோதும் அந்த பெயர்கள் குறிப்பிடப்பட்டன. சுதந்திரம் பெற்ற பிறகு அந்தந்த பிராந்தியத்தில் உள்ள மக்களின் தாய்மொழிகளில் மாநிலங்களுக்கு படிப்படியாக பெயர்கள் சூட்டப்பட்டன.

இதற்கு பல ஆண்டுகள் ஆனது. தமிழ்நாட்டின் பெயர்கூட 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றுதான் காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த 1967-ம் ஆண்டு வரை இருந்தது. இதன்பிறகு அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது. அந்த ஆண்டு ஜூலை மாதம் 18-ந்தேதி சட்டசபையில் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை அண்ணா முன்மொழிய, ஏகமனதாக நிறைவேறியது.

அப்போது அண்ணா மூன்று முறை மிக அழுத்தமாக 'தமிழ்நாடு' என்று சொல்ல, உறுப்பினர்கள் அனைவரும் 'வாழ்க' என்று விண்ணதிரும் வகையில் முழங்கினர். இந்த ஜூலை 18-ந்தேதிதான் இப்போதும் தமிழ்நாடு தினமாக தமிழக அரசால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு என்று மாற்றப்பட்டதுபோல 2011-ம் ஆண்டு ஒரிசா என்ற பெயர் ஒடிசா என்றும், பம்பாய் என்ற பெயர் மும்பை என்றும், பெங்களூர் என்ற பெயர் பெங்களூரு என்றும் மாற்றப்பட்டுள்ளது.

இப்படி பல பெயர்கள் மாற்றப்பட்டுள்ளநிலையில் கேரளா, மேற்கு வங்காளத்தின் பெயர்கள் மட்டும் மாற்றப்படாமல் இருந்தது. கேரளாவின் பெயர் மலையாளத்தில் கேரளம் ஆகும். எனவே அந்த பெயரையே சூட்டவேண்டும் என்ற தீர்மானம் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் அம்மாநில சட்டசபையில் நிறைவேறியது.

மாநில அரசும் உடனடியாக கேரளம் என்ற பெயரையே சூட்டவேண்டும், அதற்கேற்றவகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயனும் கோரிக்கை விடுத்து இருந்தார். இதைத்தொடர்ந்து கேரள பா.ஜனதா தலைவர் ராஜீவ் சந்திரசேகரும் தங்கள் கட்சியின் முழு ஆதரவையும் நல்குவதாக முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் பிரதமருக்காக கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகமான சேவா தீர்த்தில் நடந்த முதலாவது மந்திரிசபை கூட்டத்தில் கேரளா என்ற பெயரை கேரளம் என்று மாற்றும் வகையிலான தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு சேவா சங்கல்ப் தீர்மானம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வளவு நாள் தாமதமானாலும் 'பெட்டர் லேட் தேன் நெவர்' என்ற வகையில் கேரள மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவர்களும் 'இனி என்டே நாடு கேரளம்' என்று பெருமிதத்தோடு உரக்க சொல்லுவார்கள்.

இயற்கை எழில் கொஞ்சும் கடவுளின் தேசமான கேரளா, இனிமேல் கேரளம் என்றே அனைவராலும் அழைக்கப்படும். ஈன்றெடுத்த தாயை அம்மா என்று பாசத்துடனும், பரிவுடனும் அழைப்பது போன்ற ஒரு உன்னதமான உணர்வை, மாநிலத்தை தாய்மொழியில் பெயர் சூட்டி அழைப்பது தரும். இதனை வெறும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது.

கேரளாவை, கேரளம் என்று மாற்றிவிட்டீர்கள். இன்னும் ஒரு மாநிலத்தின் பெயர் பாக்கி இருக்கிறது. மேற்கு வங்காளத்தின் பெயரை எங்கள் கோரிக்கையை ஏற்று பங்களா? என ஏன் மாற்றக்கூடாது என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கேட்பதிலும் அர்த்தம் உள்ளது. இதையும் மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com