புகை பிடிக்கும் பழக்கத்துக்கு புதிய வரி முட்டுக்கட்டை போடும்

சிகரெட்டுகளுக்கு அதன் நீளத்தை பொறுத்து கலால் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புகை பிடிக்கும் பழக்கத்துக்கு புதிய வரி முட்டுக்கட்டை போடும்
Published on

புகை பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும், புகைப்பழக்கம் ஆளையே கொல்லும் என்ற எச்சரிக்கை வாசகங்களுடன், கொடூரமான படங்கள் சிகரெட் பாக்கெட்டுகள், பீடி கட்டுகளில் பிரசுரிக்கப்பட்டாலும் அந்த பழக்கத்தில் இருந்து இன்னும் முழுமையாக மக்களை விடுவிக்கமுடியவில்லை. இரு விரல்களின் இடையே கரையும் சிகரெட்டும், பீடியும் பலரின் ஆயுளையும் கரைத்துவிடுகிறது.

புகையிலையை பான் மசாலா, குட்காவாக பயன்படுத்துவது மட்டுமின்றி சிகரெட், பீடி, சுருட்டு என்ற உருமாறிய வடிவங்களில் புகைப்பது புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு என்று பல நோய்களுக்கு காரணியாக அமைந்துவிடுகிறது. இதுதொடர்பாக எவ்வளவோ எச்சரித்தும் புகைப்பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கிறார்கள். புகை நமக்கு பகை என்று அரசு கூறினாலும் பகையோடு உறவாடுகிறார்கள்.

மக்களின் உடல் நலத்தை ஆரோக்கியமாக பேணி காக்க பாவப்பொருட்கள் என்று அழைக்கப்படும் பான் மசாலா, பீடி, சிகரெட் உள்பட புகையிலை பொருட்களை அவர்களின் வாங்கும் சக்திக்கும் மீறி, அதிகமான விலையை நிர்ணயிக்கவேண்டும். இதனால் அதை வாங்க தயக்கம் காட்டுவார்கள் என்ற தீர்க்கமான முடிவில், அவற்றுக்கு அதிக வரியை மத்திய அரசாங்கம் விதித்துள்ளது.

இப்போது புகையிலை பொருட்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி.யும், 60 சதவீத இழப்பீட்டு மேல் வரியும் விதிக்கப்படுகிறது. அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் இந்த இழப்பீட்டு மேல் வரி ரத்து செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி. வசூலில் மத்திய-மாநில அரசுகளுக்கு பங்கு இருக்கும். ஆனால் மேல்வரி இவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. அந்த தொகை முழுக்க, முழுக்க மத்திய அரசாங்கத்தின் கஜானாவுக்கு சென்றுவிடும்.

புகையிலை பொருட்களுக்கான இழப்பீட்டு மேல்வரி, ஜி.எஸ்.டி.யை அமலுக்கு கொண்டுவந்தவுடன், அதனால் ஏற்படும் இழப்புகளை ஈடு கட்டுவதற்காகத்தான் நிர்ணயிக்கப்பட்டது. இந்த இழப்பீட்டு மேல் வரி முதலில் 5 ஆண்டுகளுக்கு கொண்டுவரப்பட்டது. பின்பு கொரோனா பரவிய காலகட்டத்தில் மாநிலங்களுக்கு கொடுப்பதற்காக வாங்கிய கடனை திருப்பிக்கட்டுவதற்காக மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டது.

இப்போது அந்த கடன் மத்திய அரசாங்கத்தால் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதால், அந்த மேல் வரிக்கு இனிமேல் அவசியமில்லை. எனவே புகையிலை பொருட்களுக்கு இப்போது விதிக்கப்படும் வரியில் மாற்றம் செய்யப்படுகிறது. பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு இனி 40 சதவீதம் ஜி.எஸ்.டி.யும், மேல் வரியும் விதிக்கப்படும் என்றும், சிகரெட்டுக்கு இப்போது விதிக்கப்படும் 28 சதவீத ஜி.எஸ்.டி. 40 சதவீதமாக உயர்த்தப்பட்டு அதோடு கூடுதலாக ஆயிரம் சிகரெட்டுகளுக்கு அதன் நீளத்தை பொறுத்து ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கலால் வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரியில் பங்கு கிடைக்கும் என்பதால் மாநிலங்களுக்கும் நிதி பலன் கிடைக்கும். இந்த வரி உயர்வால் இனி சிகரெட், பீடி விலை சாதாரண வருவாய் கொண்டவர்களுக்கு எட்டாத உயரத்துக்கு சென்றுவிடும். புதிய வரி உயர்வு அடுத்த மாதம் முதல்தான் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், சிகரெட், பீடி விலை இப்போதே உயர்த்தப்பட்டுவிட்டது.

இதை புகைப்பழக்கம் என்ற வலைக்குள் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களின் குடும்பத்தினர் குறிப்பாக பெண்கள் நிச்சயமாக வரவேற்கத்தான் செய்வார்கள். இந்த வரி உயர்வு புகை பிடிக்கும் பழக்கத்தை முழுமையாக ஒழிக்காது என்றாலும், பெருமளவில் குறைப்பதற்கு துணை நிற்கும். இதற்கு சிகரெட் கம்பெனிகள் தங்களின் கையிருப்பை குறைத்திருப்பதே சாட்சியாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com