

ஒரு நாட்டின் வளர்ச்சியாக இருந்தாலும் சரி, ஒரு மாநிலத்தின் வளர்ச்சியாக இருந்தாலும் சரி, அங்குள்ள தொழில் வளர்ச்சியை வைத்தே அது மதிப்பிடப்படுகிறது. தொழில் வளர்ச்சியைப் பெருக்குவதற்கும். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும்.
அந்தவகையில், மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "வேலைவாய்ப்பு வழங்கவும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்திய அரசு உங்களுடன் நிற்கிறது” என்ற நோக்கத்துடன் பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது "வளர்ச்சியடைந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம்” என்று பொருள் ஆகும்.
இந்தத் திட்டம், புதிதாக வேலைக்கு சேரும் ஊழியர்களையும், அவர்களை பணியில் அமர்த்தும் தனியார் நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, மாதம் ரூ.1 லட்சத்திற்கு குறைவான சம்பளம் பெறும் புதிய ஊழியர்களுக்கும், அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன்படி, புதிய ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை இரண்டு தவணைகளில், அதாவது 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.
அதேபோல், புதிய ஊழியர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அந்த ஊழியர்களுக்காக நிறுவனம் செலுத்த வேண்டிய பிராவிடண்ட் பண்ட் பங்களிப்புக்கான உதவியாக, மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.3 ஆயிரம் வரை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு ஊழியருக்கு இரண்டு ஆண்டுகளில் அதிகபட்சமாக ரூ.72 ஆயிரம் வரை நிறுவனங்கள் பெற முடியும். உற்பத்தித் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இந்த ஊக்கத்தொகை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு, மொத்தம் 4 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரை உருவாக்கப்படும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். இதற்காக மத்திய அரசு ரூ.99,446 கோடி ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 30 சதவீதம் பெண்கள் ஆவர். 6 மாத பணிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த 15 லட்சம் ஊழியர்களுக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தலா ரூ.7,500 அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.
அதேபோல், அவர்களை பணியமர்த்திய நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு ஊழியருக்காக அதிகபட்சமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒரே தவணையில் மட்டும் ரூ.2,400 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் 99 ஆயிரத்து 303 ஊழியர்களுக்கு ரூ.56 கோடியே 74 லட்சத்து 45 ஆயிரமும், 7,612 நிறுவனங்களுக்கு ரூ.187 கோடியே 67 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இது வெறும் வேலைவாய்ப்புத் திட்டம் மட்டுமல்ல. முதல் முறையாக வேலைக்கு செல்லும் இளைஞர்களின் கனவுகளை வலுப்படுத்துவதோடு, தொழில்துறைக்கும் பணியாளர்களுக்கும் இடையே உறுதியான பாலத்தை உருவாக்கும் முயற்சியும் ஆகும்” என்றார்.
மொத்தத்தில், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இந்த மாபெரும் முயற்சி, இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளிக்கும் சிறப்பான திட்டமாக அமைந்துள்ளது.