தாய்க்கு மட்டுமல்ல, தந்தைக்கும் மகப்பேறு விடுப்பு!

இப்போது நல்ல முடிவாக அரசு பணியில் இருக்கும் குடும்ப தலைவருக்கும் 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு அளிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார்.
தாய்க்கு மட்டுமல்ல, தந்தைக்கும் மகப்பேறு விடுப்பு!
Published on: 

சென்னை,

இல்வாழ்க்கை என்ற தேர் வலம் வருவதற்கு கணவன்-மனைவி என்ற இரு சக்கரங்கள் மிக முக்கியமானதாகும். எல்லா பொறுப்புகளையும் இருவரும் பகிர்ந்துகொண்டால்தான் குடும்ப வாழ்க்கை சிறக்கும். ஆனால் பிள்ளைப்பேறு என்பதை மனைவி மட்டும்தான் 10 மாதம் சுமந்து பெற்றாக வேண்டும். குழந்தை பெற்றெடுத்தவுடன் தாய்மார்கள் உடனடியாக மற்ற பணிகளை கவனிக்க முடியாது. கைக்குழந்தையை வளர்ப்பதில் தாயின் அர்ப்பணிப்பு மிகவும் அவசியமானது. இந்த நேரங்களில் அவர்களுக்கு குடும்பத்தினரின் அரவணைப்பு மிகவும் இன்றியமையாதது. அந்த காலங்களில் கருவுற்ற உடன் குழந்தையை ஈன்றெடுக்க பெண்கள் தாய் வீட்டுக்கு சென்று விடுவார்கள். பிரசவத்தை பார்க்கும் தாய்வீட்டார், சில மாதங்கள் அதாவது குழந்தை தவழ்வது முதல் நடை பழகுவது வரை என குழந்தை வளர்ப்பிலும் பக்கபலமாக இருப்பார்கள்.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து பிரசவங்களும் ஆஸ்பத்திரியில்தான் நடக்கவேண்டும் என்பது அரசின் கொள்கையாகும். ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்தால் கூட, வீடு திரும்பிய பிறகும் சில தினங்களுக்கு அவர்களை யாராவது உடன் இருந்து கவனிக்கவேண்டியது அவசியமாகும். நவீன காலங்களில் கூட்டுக்குடும்பங்கள் சுருங்கி, தனிக்குடும்பங்கள் விரிந்து வரும் நிலையில் கணவனுடைய ஆதரவு நிச்சயமாக குழந்தையை ஈன்றெடுக்கும் பெண்களுக்கு தேவையாகும். அரசு பணியில் இருக்கும் பெண்களுக்கு ஒரு மாதம், 3 மாதங்கள், 6 மாதங்கள், 9 மாதங்கள் என்று பல ஆட்சிகள் மகப்பேறு காலத்தை உயர்த்திய நிலையில், தி.மு.க ஆட்சியில் அது ஒரு ஆண்டாக அதிகரிக்கப்பட்டது. அப்போது 2 பிரசவங்களுக்கு மட்டுமே இந்த விடுப்பு வழங்கப்பட்டது. த.வெ.க. ஆட்சியில் மூன்றாவது குழந்தைக்கும் இந்த ஒரு ஆண்டு விடுப்பு கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இப்போது நல்ல முடிவாக அரசு பணியில் இருக்கும் குடும்ப தலைவருக்கும் 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு அளிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருப்பது ஆண்களுக்கு மட்டுமன்றி, குழந்தையை பிரசவிக்கும் அந்த பெண்ணுக்கும் பெரும் மகிழ்ச்சியை தருவதாகும். மத்திய அரசு பணியாளர்களுக்கு 2002-ம் ஆண்டு முதல், ஆண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு 15 நாட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல ராஜஸ்தான், மேற்குவங்காளம், சிக்கிம், கேரளத்திலும் ஆண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் விஜய்யின் அறிவிப்பு குழந்தையை சுமந்த தன்னை நெஞ்சில் சுமக்க காதல் கணவனும் துணையாக இருக்கிறார் என்ற மனநிறைவை பெண்களுக்கு தரும்.

இந்த விடுப்பை குழந்தை பிரசிவிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பும், குழந்தை பிறந்து 6 மாதங்களுக்குள்ளும் எப்போது வேண்டுமானாலும் கணவன் எடுத்துக்கொள்ளலாம். இதில் மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியது எதுவென்றால், இரண்டு பிரசவங்களுக்கு இந்த விடுமுறை கிடைக்கும். இதற்கு முன்பு மனைவிக்கு பிரசவம் நடக்கும்போது அரசு ஊழியராக இருக்கும் கணவர் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த விடுமுறை அவர்களின் ஈட்டிய விடுப்பிலோ, மருத்துவ விடுப்பிலோ கழித்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மனைவியின் பிரசவத்துக்காக அரசு பணியில் இருக்கும் கணவனுக்கு தனியாக இதற்கென்றே 15 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது முதல்-அமைச்சர் விஜய் அரசின் முற்போக்கான நடவடிக்கையாகும். இது பிரசவிக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல அவர்களை தங்களது கண்களாக பார்க்கும் கணவன்மார்களுக்கும் பயன் அளிக்கும்.

X