பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும்

பொதுமக்கள் தேவையில்லாமல் தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டுக்கு தவிர்க்க வேண்டும்.
பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும்
Published on

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் மிகவும் சிக்கலான நிலைமை பிரதமர் மோடியை பல முடிவுகளை எடுக்க தூண்டியுள்ளது. அந்த முடிவுகளை பிரதமர் எடுத்தால் மட்டும் பிரச்சினைகளை தீர்த்துவிடமுடியாது. மக்களும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். அமெரிக்கா உடனான போர் காரணமாக ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய், எல்.பி.ஜி. சிலிண்டர் மட்டுமல்லாமல் உரத்தின் தேவைக்காகவும் இந்தியா, வெளிநாடுகளையே சார்ந்து இருக்கிறது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு அந்த வழியாக கப்பல்கள் இந்தியாவுக்கு வரமுடியவில்லை. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக அதன் விலையும் விண்ணை தொட்டுவிட்டது. இதனால் இந்தியாவின் இறக்குமதி செலவு கணிசமாக அதிகரித்துவிட்டது. இது சங்கிலி தொடராக பொருளாதார நிலையையே உலுக்கிவிட்டது.

இந்த சூழ்நிலையில் ஐதராபாத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய நிலையை சமாளிக்க பொதுமக்கள் தங்களது பங்களிப்பை நல்கவேண்டும் என்று கோரியிருக்கிறார். மக்கள் அனைவரும் பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளவேண்டும். இதற்கு பதிலாக மெட்ரோ ரெயில் மற்றும் பொதுபோக்குவரத்தை பயன்படுத்தவேண்டும்.

சரக்கு போக்குவரத்துக்கும் மோட்டார் வாகனங்களை தவிர்த்து ரெயில்களில் அனுப்பவேண்டும். எரிபொருள் பயன்பாட்டை குறைக்க பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றவேண்டும். இது எல்லாவற்றையும்விட மின்சார வாகனங்களை அனைவரும் பரவலாக பயன்படுத்தவேண்டும். இதுபோல அந்நிய செலாவணியை குறைப்பதற்காக பொதுமக்கள் தேவை இல்லாமல் தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டுக்கு தவிர்க்க வேண்டும்.

கொரோனா நெருக்கடியிலும், உக்ரைன் போரின்போதும் உலகளாவிய பொருளாதாரத்தில் எப்படி பாதிப்பு ஏற்பட்டதோ, அதுபோல இப்போது நிறைய பொருட்களின் சப்ளையிலும் கடுமையானபாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் உணவு, எரிபொருள், உரம் விலை உயர்ந்துவிட்டது. ஆனாலும் சர்வதேச சந்தையில் ஒரு மூட்டை உரத்தின் விலை ரூ.3 ஆயிரமாக இருக்கும் சூழ்நிலையில், மத்திய அரசு மானியம் கொடுத்து இந்திய விவசாயிகளுக்கு ஒரு மூட்டை உரத்தை ரூ.300-க்கு வழங்குகிறது.

ரசாயன உரங்களை விவசாயிகள் மிகவும் அதிகமாக பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இறக்குமதியையே சார்ந்திருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது. எனவே ரசாயன உர பயன்பாட்டை 50 சதவீதம் குறைக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல் இந்தியாவில் தயாரித்த பொருட்களையே பயன்படுத்துவோம் என்ற தீர்க்கமான உறுதிப்பாட்டை எடுக்கவேண்டும் என்று மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை மோடி பட்டவர்த்தனமாக தெரிவித்துவிட்டார். அவருடைய ஆலோசனைகளை மக்கள் பின்பற்றினால்தான் நாட்டின் பொருளாதார நிலை பாதிப்பை சமாளிக்க முடியும். இதற்கு இந்திய பொருட்களையே வாங்குவோம் என்பதை அனைவரும் ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையை கடந்த ஒருவாரத்தில் மட்டும் 2 முறை உயர்த்தியும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள்தோறும் சுமார் ரூ.750 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது.

இதனால் பெட்ரோல்-டீசல் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் எரிபொருள் இடர்பாட்டை தவிர்க்க பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தவேண்டும் என்றும் பிரதமர் கூறியிருப்பது கொரோனாவைப் போல ஒரு பேரிடரை சந்திக்கப்போகிறோமோ? என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் இவ்வாறு கூறினாலும், எண்ணெய்த்துறை செயலாளர் நீரஜ் மிட்டல், 'எரிபொருள் வினியோகத்தை ரேஷனில் கொண்டுவரும் திட்டம் இல்லை. 60 நாட்களுக்கு தேவையான பெட்ரோல்-டீசல், 45 நாட்களுக்கு தேவையான எல்.பி.ஜி.யும் இருக்கிறது' என்று சமீபத்தில் கூறியிருப்பது சற்று மன நிம்மதியை அளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com