

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளிவந்த பிளஸ்-2 வகுப்பு இறுதி தேர்வு முடிவுகளில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் இந்த தேர்வை எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இந்த ஆண்டு மொத்தம் 7 லட்சத்து 91 ஆயிரத்து 654 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இதில் வழக்கம்போல மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் பேர் எழுதினர். அதேபோல், தேர்ச்சியிலும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம். மொத்தம் தேர்வு எழுதிய 4 லட்சத்து 18 ஆயிரத்து 724 மாணவிகளில், 4 லட்சத்து 6 ஆயிரத்து 167 மாணவிகள் அதாவது. 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களை பொறுத்தமட்டில், தேர்வு எழுதியவர்களில் 93.19 சதவீதம் பேர்தான் வெற்றியடைந்துள்ளனர். ஆக மாணவர்கள் மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோரும் மற்றும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் மாணவர்களின் கல்வியில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்பது புலனாகிறது. இந்த ஆண்டும் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம்தான் அதிகமாக உள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களின் தேர்ச்சி சதவீதமும் அதை எட்டிப்பிடித்துவிடும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7,536 மேல்நிலைப்பள்ளிகளில் 2,639 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை அடைந்து சாதனை படைத்திருந்தது. இதில் 489 அரசு பள்ளிகளும் அடங்கும். இதுமட்டுமல்லாமல், அரசு பள்ளிகளில் படித்த பல மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்து முதன்மையானவர்களாக திகழுகின்றனர்.
அறிவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதால், என்ஜினீயரிங், மீன்வளம், வேளாண் படிப்புகளின் கலந்தாய்வுக்கான 'கட்-ஆப்' மதிப்பெண் குறையும் என கல்வியாளர்கள் கணித்திருக்கிறார்கள். இந்த தேர்வு முடிவுகளில் பெரிதும் மகிழ்ச்சியை தந்த செய்தி என்னவென்றால், பல ஏழை குடும்பங்களில் உள்ள மாணவ- மாணவிகள் அதிக மதிப்பெண்களைப் பெற்று சிகரத்தை தொட்டு இருக்கிறார்கள்.
சென்னையில் 3 மாத குழந்தையாக இருக்கும்போது ஒரு கோவிலில் பெற்றோரால் கைவிடப்பட்டு ஆதரவில்லாமல் விட்டு செல்லப்பட்ட ஒரு பெண் குழந்தையை அவளது கொள்ளுப் பாட்டி கமலம் என்ற பூட்டி வீட்டு வேலைசெய்து கொண்டே அவரை வளர்த்தது மட்டுமல்லாமல், படிக்கவும் வைத்தார்.
பூட்டியின் கஷ்டத்தை உணர்ந்து அன்னபூரணி என்ற அந்த மாணவி 2 வீடுகளில் வீட்டு வேலை செய்து கொண்டே சைதாப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து இப்போது நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறார். இதுபோல சாலையோரத்தில் வாழ்ந்த அர்ச்சனா என்ற மாணவியும், பால் டேவிட் என்ற மாணவனும் தெருவிளக்கில் படித்தே உயர்ந்த மதிப்பெண் பெற்று அவர்களின் வெற்றி பலருக்கும் உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.
இதுபோல ஆட்டோ டிரைவர் சரவணன் மகள் சந்தியா 600-க்கு 595 மதிப்பெண்ணும், சலவை தொழிலாளி ஆனந்தகுமாரின் மகள் மைதிலி 600-க்கு 593 மதிப்பெண்ணும் பெற்று உயர்ந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளின் வரிசையில் கைகோர்த்து நின்று அழகு சேர்த்துவிட்டனர்.
இதுபோல பல ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் உயர்மதிப்பெண்களைப்பெற்று கல்வி எனும் சிகரத்தை எட்டிப்பிடிக்க ஏழ்மை தடைக்கல் இல்லை, அது வெற்றி படிக்கல் என்பதை நிரூபித்துவிட்டனர். மற்ற ஏழை மாணவ- மாணவிகளுக்கும் இவர்களின் இந்த ஊக்கம், இருளில் ஒளிவீசும் விளக்காய் பிரகாசித்திருக்கிறது.