

தமிழ்நாட்டில் 6,807 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலையும், 12,875 கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலைகளும் இருக்கின்றன. இதுதவிர, 12,037 கிலோமீட்டர் முக்கிய சாலைகளும், 45,139 கிலோமீட்டர் இதர சாலைகளும் என மொத்தம் 76 ஆயிரத்து 858 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைகள் இருக்கின்றன. எந்த அளவுக்கு சாலை வசதிகள் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நாட்டில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 447 விபத்துகளும், அதனால் 1 லட்சத்து 1,139 உயிரிழப்புகளும் நடந்திருக்கின்றன. அனைத்து மாநிலங்களையும் ஒப்பிட்டால் தமிழ்நாடுதான் விபத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், வேகத்தடைகளும் முக்கியமானதாக இருக்கின்றன. வாகனங்கள் அதில் ஏறி இறங்கும்போது நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பட்டினப்பாக்கத்தில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை மீது கார் ஏறி இறங்கியபோது கவிழ்ந்த விபத்தில் தமிழக கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர், மனைவி நிவேதாவுடன் உடல் கருகி உயிரிழந்தார். தமிழக முன்னாள் அமைச்சரின் மகன் ஒருவர் சென்னையில் உள்ள ஒரு முக்கிய சாலையில் இருந்த மேடை போன்ற வேகத்தடையால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இதுபோன்று சம்பவங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். வேகத்தடையால் விபத்துக்களும், உயிரிழப்புகளும் தினமும் அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன. வேகத்தடைகளை அமைப்பதற்கு சில விதிமுறைகளை இந்திய சாலைகள் காங்கிரஸ் அமைப்பு வரையறுத்துள்ளது. இதன்படி, மோட்டார் வாகனங்கள் 25 கிலோமீட்டர் வேகத்தில் பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில் வேகத்தடைகள் வளைந்த அமைப்பில் இருக்கவேண்டும்.
இதன் உயரம் அதிகபட்சமாக 10 சென்டிமீட்டர் மட்டுமே இருக்கவேண்டும். அதுபோல, சாலையின் குறுக்கே அதன் அகலம் 3.5 மீட்டரும், வளைவு ஆரம் 15 மீட்டர் கொண்டதாகவும் அமைந்திருக்கவேண்டும். பஸ் மற்றும் லாரிகள் அதிகம் செல்லும் சாலைகளில் 1.5 மீட்டர் நீளமுள்ள சரிவுகள் இருபுறமும் அமைக்கப்படலாம். இதுமட்டுமல்லாமல், இந்த வேகத்தடைகள் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாகத் தெரியும் வகையில், அதன்மீது கருப்பு மற்றும் வெள்ளை அல்லது மஞ்சள் ஒளிரும் பட்டைகள் மாறி மாறிப் பூசப்படவேண்டும். 50 மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே வேகத்தடை என்று எச்சரிக்கும் சாலைப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கவேண்டும். பாலங்கள், வளைவுகள் மற்றும் குறுகிய சாலைப் பகுதிகள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கக்கூடாது. போலீசார் அனுமதியோடு சிறிய சாலைகள், குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள் அருகேயும், பெரிய சாலையோடு சிறிய சாலை சந்திக்கும் இடங்களிலும் வேகத்தடைகள் அமைக்கலாம்.
இப்படி பல விதிகளுக்குட்பட்டே வேகத்தடைகள் அமைக்கப்படவேண்டும். ஆனால், பல வேகத்தடைகள் விதிகளுக்கு மீறி அமைக்கப்பட்டுள்ளன. இதனால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், அதிக உயரத்துடன் அமைக்கப்பட்டு இருப்பதால் அதைக் கடந்து செல்லும் மோட்டார் வாகனங்களும் கடுமையான சேதங்களை சந்திக்கின்றன. குறிப்பாக, சேதமடையும் சொகுசு கார்களின் உதிரி பாகங்களை சரிசெய்ய பல ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் செலவு செய்யவேண்டியிருக்கிறது. எனவே, அரசு, குறிப்பாக போலீசாரும், உள்ளாட்சி அமைப்புகளும் ஆய்வு செய்து, விதிமீறலோடு அமைக்கப்பட்டுள்ள அனைத்து வேகத்தடைகளையும் சீர்செய்யவேண்டும். வேகத்தடைகள் விபத்துகளைத் தடை செய்வதாக இருக்கவேண்டுமே தவிர, விபத்துகளை ஏற்படுத்தும் மேடுகளாகவும், கார்களைப் பழுதாக்கும் திட்டுகளாகவும் இருக்கக்கூடாது. எத்தனையோ நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் த.வெ.க. அரசு, வேகத்தடையால் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், கார்கள் பழுதாகுவதை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக இருக்கிறது.