காலமகள் கண் திறப்பாள்

இந்த ஆண்டு எல் நினோ, சூப்பர் எல்நினோவாக மாறுவதால் தென்மேற்கு பருவமழை பொய்த்தது.
காலமகள் கண் திறப்பாள்
Published on: 

1963-ம் ஆண்டில் வெளியான எம்.ஜி.ஆர்., தேவிகா நடித்த 'ஆனந்த ஜோதி' என்ற திரைப்படத்தில், கவிஞர் கண்ணதாசன் எழுதிய 'காலமகள் கண் திறப்பாள் சின்னையா, நாம் கண் கலங்கி கவலைப்பட்டு என்னையா, நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா, அதில் நமக்கும் ஒரு வழி இல்லையா என்னையா' என்ற வரிகளைக் கொண்ட ஒரு பாடல் உண்டு.

டெல்டா விவசாயிகள்

முழுக்க முழுக்க நம்பிக்கையூட்டும் வரிகளைக் கொண்ட அந்தப் பாடலைக் கேட்டால் மனதில் புதிய தெம்பு பிறக்கும். அந்த நிலைதான் இப்போது மேட்டூர் அணை குறிப்பிட்ட நேரத்தில் திறக்காததால் கவலைப்பட்டுக் கொண்டிருந்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருப்பது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்குப் பருவமழை

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இப்போது சம்பா சாகுபடி நடந்து வருகிறது. வழக்கமாக, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஆண்டு கர்நாடகத்தில் இருந்து போதிய அளவு தண்ணீர் வராததால், ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்குப் பருவமழை தமிழ்நாட்டைவிட கர்நாடகத்தில் அதிக அளவில் பெய்கிறது. கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து, காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் துள்ளுவார்கள். ஏனெனில், கர்நாடகத்தில் பெய்யும் மழையால்தான் காவிரியில் நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும். இதனால், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்க வழிவகை ஏற்படும்.

மேட்டூர் அணை

ஆனால், இந்த ஆண்டு எல் நினோ, சூப்பர் எல்நினோவாக மாறுவதால் தென்மேற்கு பருவமழை பொய்த்தது. கர்நாடகமும் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய அளவு தண்ணீரைத் திறந்துவிடவில்லை. கடந்த 4 மாதங்களில் 123.14 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், 44.208 டி.எம்.சி. தண்ணீர்தான் திறந்துவிடப்பட்டது.

இதனால், மேட்டூர் அணையில் 91.56 அடி தண்ணீர் மட்டுமே. அதாவது 54.452 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் 1-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மொத்தம் 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைமடைக்குத் தண்ணீர் செல்ல மிகவும் தாமதமானதால், விவசாயிகள் செப்டம்பர் மாத இறுதியில்தான் நேரடி நெல் விதைப்பு சாகுபடியைத் தொடங்கினர்.

வடகிழக்குப் பருவமழை

மேட்டூர் அணை எந்த நேரத்திலும் மூடப்படும் அபாயம் இருக்கிறது. ஜனவரி மாதம் பொங்கலையொட்டித்தானே அறுவடை இருக்கும்; அதுவரை தண்ணீருக்கு என்ன செய்வோம் என்று விவசாயிகள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாத இறுதி வரை பெய்யும் வடகிழக்குப் பருவமழை, இந்த ஆண்டு வழக்கத்தைவிட சராசரியாக 20 சதவீதம் அதிகமாகப் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஆனால், நெற்கதிர்கள் கதிர்கட்டும் பருவமான ஜனவரி மாதத்திலும் வயல்களில் தண்ணீர் இருக்க வேண்டும் என்கிறார் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன். ஆக காலமகள்தான் கை கொடுக்க வேண்டும். டிசம்பர் வரை வடக்கிழக்கு பருவமழை விவசாயிகளின் தேவைக்கேற்ப பொழிய வேண்டும். அதற்கு பிறகும் அறுவடை வரை தண்ணீர் இருக்கவேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com