முழுமையாக ஒழிக்கப்படவேண்டிய போதை கலாசாரம்

பொதுமக்கள், மாணவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை நிச்சயமாக முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
முழுமையாக ஒழிக்கப்படவேண்டிய போதை கலாசாரம்
Published on

பூரண மதுவிலக்கு என்பது இன்றைய காலகட்டத்தில் நிச்சயமாக சாத்தியம் இல்லாததாகும். அரசு மதுக்கடைகளைச் சட்டத்தின் இரும்புக்கரம் கொண்டு மூடினாலும், மது அரக்கனின் பிடியில் சிக்கியவர்கள் அதில் இருந்து உடனடியாக விடுபட முடியாது. இதனால் அவர்கள் கள்ளச்சாராயத்துக்கு தாவுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அரசாலும் மதுவிற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை விட்டுக்கொடுக்க முடியாது. இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுதவிர பிரவுன் சுகர், அபின், கொக்கைன், மெத்தபெட்டமைன் என்று விதவிதமான பெயர்களில் உள்ள போதைப் பொருட்களும் சரளமாக புழங்குகின்றன.

இளைஞர் சமுதாயம்

இந்த போதைப்பொருட்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சட்டவிரோதமாக கடத்தி கொண்டுவரப்படுகின்றன. பிராந்தி, விஸ்கி குடித்தால் அதன் வாசனை காட்டிக்கொடுத்து விடும். ஆனால் போதைப் பொருட்களை பயன்படுத்தினால் வாசனையை வைத்து யாரும் கண்டுபிடிக்க முடியாது.

போதையும் நீண்ட நேரம் நிலைத்திருக்கும் என்ற எண்ணத்தில் இன்றைய இளைஞர் சமுதாயம் போதைப் பொருட்களை நோக்கி பாதை மாறுகிறது. கஞ்சா சாக்லெட்டுகள் கூட பள்ளிகளின் அருகில் விற்பனை செய்வது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல்-அமைச்சராக விஜய், கடந்த மே மாதம் 10-ந்தேதி பொறுப்பேற்ற உடனேயே முதல் காரியமாக மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

போதைப் பொருட்கள் தடுப்புப்படை

அதில் ஒன்று, போதைப் பொருட்களைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்துக்கு ஒன்று என்ற வகையில் 37 காவல் நிலையங்களும், 9 மாநகர போலீஸ் கமிஷனர் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 28 காவல் நிலையங்களும் என மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப்படை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பு காற்றில் கலந்த கீதமாக போய்விடாமல் உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட்டது. இதற்காக அரசாணை பிறப்பித்தது மட்டுமல்லாமல், போலீஸ் படையின் எண்ணிக்கையும், அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இந்த படை, கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் ஒரு ஐ.ஜி., 2 சூப்பிரண்டுகள், 15 துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 65 படை பிரிவுகளும் தலா ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், 20 போலீசார் கொண்டு இயங்கும்.

வாட்ஸ்-அப் எண்ணில் புகார்

இந்த போலீசார் போதைப் பொருள் தடுப்பு பணி தவிர வேறு எந்த பணிக்கும் அனுப்பப்படமாட்டார்கள். இதுதவிர போதைப்பொருள் நடமாட்டம் குறித்து வரும் புகார்களை பெற்றுக்கொள்ள 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9498410581 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு

இதுமட்டுமல்லாமல் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைய மாநிலம் முழுவதும் போதைப் பொருட்கள் எதிர்ப்பு உறுதிமொழிகளை பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் எடுப்பதை சென்னையில் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ளார். இதில் அரசு மட்டுமல்லாமல், பொதுமக்கள், மாணவர்களின் ஒத்துழைப்பும் இருந்தால் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை நிச்சயமாக முடிவுக்குக் கொண்டுவர முடியும். போதைப்பொருட்களை முளையிலேயே கிள்ளி எறிய போதைப் பொருள் தடுப்பு படைகள் அவசியம். இதை முன்னெடுத்த முதல்-அமைச்சர் விஜய் பாராட்டுக்குரியவர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com