டிரம்ப் கார்டுக்கு முன்னால் எடுபடாமல் போன ரெட் கார்டு

இதுவரை உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் 189 ரெட் கார்டுகள் காட்டப்பட்டுள்ளன.
டிரம்ப் கார்டுக்கு முன்னால் எடுபடாமல் போன ரெட் கார்டு
Published on

பொதுவாக விளையாட்டுக்குள் அரசியல் நுழையக்கூடாது என்பது உலக நியதி. நாடுகளுக்கு இடையே போர், பகைமை, அரசியல் மோதல்கள் இருந்தாலும் அவற்றை தாண்டி மக்களை இணைக்கும் சக்தியாக விளையாட்டு திகழ்கிறது. இதற்கு உதாரணமாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் நீடித்தாலும், உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணி பங்கேற்று விளையாடியதை சொல்லலாம்.

விளையாட்டின் நேர்மையும், நம்பகத்தன்மையும் நடுவர்களின் முடிவுகளில்தான் இருக்கிறது. விதிமுறைகளின் அடிப்படையில் அவர்கள் எடுக்கும் தீர்ப்புகளே போட்டியின் போக்கையும், முடிவையும் நிர்ணயிக்கின்றன. அந்த அதிகாரமும், சுதந்திரமும் பாதுகாக்கப்படும்போதுதான் விளையாட்டின் மதிப்பு நிலைத்திருக்கும்.

ரெட் கார்ட்

ஆனால், எதிலும் தனது செல்வாக்கு மேலோங்கவேண்டும் என்ற ஆதிக்கமனப்பான்மையுடன் செயல்படும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அரசியல் நிழல், இப்போது விளையாட்டுத் துறையிலும் படரத் தொடங்கியிருப்பதுதான் கவலைக்குரிய விஷயமாகும். உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக்அவுட் சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அணியும், ஐரோப்பாவில் உள்ள போஸ்னியா நாட்டு அணியும் மோதின. இந்த போட்டியின்போது அமெரிக்க நட்சத்திர வீரரான போலரின் பலோகன் எதிரணி வீரரை தள்ளிவிட்டு 'பவுல்' செய்தார். உடனடியாக நடுவர் சிவப்பு அட்டையை, அதாவது ரெட் கார்டை காட்டி அந்த வீரரை வெளியே அனுப்பினார்.

கால்பந்து விளையாட்டின் விதிமுறைப்படி ரெட் கார்டு காட்டப்பட்ட வீரர் அடுத்த போட்டியில் விளையாட முடியாது. இதற்கு முன்பு இப்போது நடந்துவரும் கால்பந்து போட்டியில் இதுபோல விதிகளை மீறி விளையாடிய 12 வீரர்களுக்கு ரெட் கார்டு காட்டப்பட்டு, அவர்களும் அடுத்த போட்டியில் விளையாடாமல் தடையை அனுபவித்தனர். எல்லோருக்கும் ஒரு நியதி, அமெரிக்காவுக்கு ஒரு நியதியா? என்று உலகமே கேட்டுக்கொண்டு இருக்கிறது.

ஒழுங்கு நடவடிக்கை

ஏனென்றால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதில் விளையாட்டு விதி கடைபிடிக்கப்பட்டுள்ளது என்று நினைக்காமல், அமெரிக்காவுக்கே ஏற்பட்ட அவமானமாக கருதி பிபா என்று கூறப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் ஜியானி இன்பான்டினோவை தொடர்புகொண்டு, ரெட் கார்டு நடவடிக்கையை விலக்கிக்கொள்ளவேண்டும் என்று அதிகார தோரணையில் கூறினார். டிரம்பின் வேண்டுகோளை ஏற்று, இன்பான்டினோ தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விதி 27-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கான அந்த தடையை விலக்கி விட்டார்.

வெளியேறிய அமெரிக்கா

உடனடியாக அந்த தடைக்கு ஆட்பட்டிருந்த வீரர் போலரின் பலோகன், அடுத்து நடந்த அமெரிக்கா-பெல்ஜியம் இடையேயான போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். அவர் விளையாடக்கூடாது என்று பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் முறையிட்டும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பெல்ஜியம் அணி 4 கோல்களை போட்டு அமெரிக்காவை நாக் அவுட்டில் வெளியேற்றியது.

டிரம்ப் கார்டு

இதுவரை உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் 189 ரெட் கார்டுகள் காட்டப்பட்டுள்ளன. அதில் 1962-ம் ஆண்டு பிரேசில் நாட்டு வீரர் கரீஞ்சாவுக்கு வழங்கப்பட்ட ரெட் கார்டு இதுபோல் விலக்கப்பட்டது. இப்போது 64 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதுபோல நடந்திருக்கிறது. கால்பந்து வரலாற்றிலேயே இது கருப்பு புள்ளியாக இருக்கிறது.

விளையாட்டில் அரசியல் மூக்கை நுழைப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கால்பந்தை அரசியல் அதிகாரத்தின் மைதானமாக மாற்றுவதை அனுமதிக்கவேமுடியாது என்பதுதான் விளையாட்டு ஆர்வலர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆக, ரெட் கார்டு, டிரம்ப் கார்டுக்கு முன்னால் வலுவிழந்து விட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com