

அய்யன் திருவள்ளுவர், 'பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்' என்று குறள் வடித்துள்ளார். இதற்கு நெற்கதிர்களையுடைய நிழலினையுடையவர், பல அரசர்களின் குடை நிழலையும் தம் குடைக் கீழ் காண்பார்கள் என்று பொருள். சுருங்கச் சொன்னால் நாட்டை ஆளும் அரசர்களும் அன்னம் படைக்கும் உழவர்களால்தான் வாழ்கின்றனர் என்பதாகும்.
அப்படிப்பட்ட உன்னதமான தொழிலைச் செய்யும் விவசாயிகளின் நிலை இப்போது கவிஞர் வைரமுத்து சொன்னதுபோல, விலை இருந்தால் விளைச்சல் இல்லை, விளைச்சல் இருந்தால் விலை இல்லை என்ற நிலையிலேயே இருக்கிறது. இத்தகைய விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க முதல்-அமைச்சர் விஜய் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தும் வகையில் உறுதிமொழி அளித்திருந்தார்.
அதாவது, நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500-ம், கரும்பு டன்னுக்கு ரூ.4,500-ம் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். கடந்த வாரம் 6-ந்தேதி சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தபோது இதுபற்றி எந்த அறிவிப்பும் இல்லை என்பதுதான் விவசாயிகளுக்கு பெரிய குறையாக இருந்தது. இந்த வேளாண் பட்ஜெட் குறித்து பாரம்பரியமும், நவீனமும் கலந்த விவசாயம் என்ற தலைப்பில் தினத்தந்தி தலையங்கம் வெளியிட்டது.
அதில், பட்ஜெட்டை பாராட்டி எழுதப்பட்டு இருந்தாலும், நெல், கரும்புக்கு ஆதார விலை, கூட்டுறவு கடன்கள் முழுமையாக ரத்து போன்ற விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை என்பது அவர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த ஏமாற்றத்தைப் போக்கும் வகையில் தினத்தந்தி தலையங்கம் வெளியான 2 நாட்களில் அதாவது நேற்று முன்தினம் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும், இனிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் நிதி நிலை சரியில்லாமல் இருந்தாலும், நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதி தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவில் மாநில அரசின் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
குறைந்தபட்ச ஆதார விலையுடன், மாநில அரசின் ஊக்கத்தொகையாக சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.289-ம், பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.159-ம் உயர்த்தி சன்னரக நெல்லுக்கு ரூ.2,750-ம், பொதுரக நெல்லுக்கு ரூ.2,600-ம் என வழங்கப்படும். நெல்லுக்கான ஊக்கத்தொகையை ஒரு ஆண்டுக்கு ரூ.156-க்கு மேல் வழங்கப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.
இதுபோல கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் டன்னுக்கு ரூ.3290.50 என்று ஆதார விலையை நிர்ணயம் செய்துள்ள நிலையில், அதற்கு மேல் தமிழக அரசு ஊக்கத்தொகையாக ரூ.709.50 நிர்ணயித்து, கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் கிடைக்கும் வகையில் விவசாயிகளுக்கு தோள் கொடுக்கும் தோழனாக அறிவித்துள்ளது. இது பட்டுப்போன மரத்தையும் பால் சுரக்க வைப்பது போன்று விவசாயிகளுக்கு அளவு கடந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கூட ஆகாத நிலையில் ஆதார விலையை இவ்வளவு உயர்த்திய முதல்-அமைச்சர் விஜய் கரும்புக்கு ஆதார விலையாக ரூ.4,500-ம், நெல்லுக்கு ரூ.3,500-ம் கொடுக்கப்போகும் நாள் தூரத்தில் இல்லை. வரும் ஆண்டுகளில் அதையும் செய்துவிடுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை விவசாயிகளுக்கு இருக்கிறது.