உண்மை வெளியே வரவேண்டும்

மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிப்பதாக மும்பை ஐகோர்ட்டு கூறியது.
உண்மை வெளியே வரவேண்டும்
Published on

மும்பையில் 19 ஆண்டுகளுக்கு முன்பு மின்சார ரெயில்களில் நடந்த குண்டு வெடிப்பு நாட்டை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதன் வடுக்கள் கூட இன்னும் அழியாத நிலையில், மீண்டும் ரணமாக்கும் வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு வந்து இருக்கிறது.

மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி மாலை 6.25 மணி அளவில் அடுத்தடுத்து 6 நிமிடங்களில் 7 மின்சார ரெயில்களில் நடந்த வெடிகுண்டு விபத்தில் 188 பேர் உயிரிழந்தனர். 828 பேர் படுகாயம் அடைந்தனர். இங்கு வெடித்த குண்டுகளெல்லாம், மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளாகும். இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்களெல்லாம் அப்பாவி மக்கள்.

இந்த துயரமான சம்பவம், மும்பை 11/7 வெடிகுண்டு சம்பவம் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. மராட்டிய பயங்கரவாத தடுப்பு படை இந்த வழக்கில் புலனாய்வு செய்தது. அதில் இந்த கொடிய சம்பவத்தை அரங்கேற்றியது பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் உதவியோடு சிமி இயக்கம்தான் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேரில் சிலருக்கு இந்த கொடிய செயலுக்கான பயிற்சியை லஷ்கர்-இ-தொய்பா தளபதி அசாம் சீமா வழங்கினார் என்று வழக்கை புலனாய்வு செய்த அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 2015-ம் ஆண்டில் மும்பை சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் 5 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. அதில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார்.

இதற்கிடையில் தீர்ப்பை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில் தண்டனை பெற்றவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்வதாக அறிவித்தது. மேலும் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முக்கிய ஆதாரங்கள் பலவீனமானவை, சிதைக்கப்பட்டவை, சட்ட விரோதமாக சேகரிக்கப்பட்டவை என்று கூறிய ஐகோர்ட்டு, சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறியது. அதோடு சித்ரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு பிறகே சாட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டியது வினோதமாக இருக்கிறது. சில சாட்சிகள், பல வழக்குகளில் சாட்சி சொல்வதையே வழக்கமாக கொண்டவர்கள் என்று கூறிய ஐகோர்ட்டு, சாட்சிகளின் வாக்குமூலங்கள் எல்லாம் கட்-காப்பி- பேஸ்ட் என்பது போல ஒரே மாதிரியாக இருக்கிறது என்றெல்லாம் பல காரணங்கள் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்புக்கு காரணம் புலனாய்வு செய்த போலீசாரும், வழக்கு நடத்திய அரசு வக்கீல்களும் தான். இந்த கோர சம்பவத்துக்கு குற்றம்சாட்டப்பட்ட இந்த 11 பேரும் காரணம் இல்லையென்றால், ஐகோர்ட்டு கவலை தெரிவித்தபடி உண்மையான தாக்குதல்காரர்கள் இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கலாமோ என்ற சந்தேகமும் இருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய அரசு அப்பீல் செய்து இருக்கிறது. நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அங்கேயாவது வழக்கை உரிய முறையில் வாதாடி நியாயமான தீர்ப்பை வாங்கித்தர வேண்டும் என்றால் அது வழக்கை நடத்தப்போகும் மராட்டிய அரசிடம்தான் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டுதான் நீதித்துறையின் உச்சபட்ச அமைப்பு. எனவே அங்கு இந்த வழக்கின் உண்மை வெளியே வர வேண்டும், நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com