தமிழ்நாடு, கேரளா மக்களுக்கு மனதின் குரல்

மறைந்த ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி பேசினார்.
தமிழ்நாடு, கேரளா மக்களுக்கு மனதின் குரல்
Published on

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று மனதின் குரல் என்ற தலைப்பில் நாட்டு மக்களிடையே வானொலியில் உரையாற்றி வருகிறார். அந்தவகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது 131-வது உரையில் பல சிறப்பம்சங்களை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருந்து மறைந்த ஜெயலலிதாவை அம்மா என்று புகழாரம் சூட்டி பேசினார். சிலர் எப்போதும் மக்களின் இதயங்களில் குடி கொண்டிருப்பார்கள். சமூகநலனுக்காக செயலாற்றியவர்களாக இருப்பார்கள். தங்களுடைய நற்காரியங்கள் வாயிலாக மக்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பார்கள். இப்படி மக்கள் நேசிக்கும் தலைவர்தான் ஜெயலலிதா. பிப்ரவரி 24-ந்தேதி அவருடைய பிறந்த நாளாகும்.

தமிழ்நாட்டு மக்களுக்கு இவரிடம் இருக்கும் ஈடுபாடு எந்த அளவுக்கு ஆழமானது என்றால், இன்றும்கூட நான் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தால், இது நன்றாக தெரிகிறது. அம்மா ஜெயலலிதாவின் பெயரை நான் குறிப்பிட்டவுடனேயே, தமிழ்நாட்டு மக்களின் முகங்கள் மலர்கின்றன. நமது தாய்க்குலம் குறிப்பாக அவருடன் ஆழமாக இணைந்து இருக்கிறது.

இதற்கான காரணம் என்னவென்று சொன்னால், அரசு அதிகாரத்தில் அவர் இருந்தபோது பெண்கள், தாய்மார்கள், சகோதரிகளுக்காக பாராட்டுக்குரிய பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என்பதுதான். மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை சீராக வைத்து இருக்க சிறப்பான வழிமுறைகளை கடைபிடித்தார். அவருக்கு தேசபக்தி உணர்வு மிக அதிகமாக இருந்தது. அதோடு இந்தியாவின் கலாசாரப் பாரம்பரியம் மீதும் அவருக்கு மிகுந்த பெருமிதம் இருந்தது என்று சொன்னார்.

2002 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது அவருடைய பதவியேற்பு விழாக்களில் ஜெயலலிதா கலந்துகொண்டதையும் நினைவு கூர்ந்து, பொங்கல் திருநாளன்று மதிய உணவுக்காக தனது இல்லத்துக்கு வருமாறு ஜெயலலிதா அழைப்பு விடுத்ததையும் கூறினார். அவருடைய நட்புறவை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது.

அவருக்கு என் நினைவு அஞ்சலிகள், சமுதாயத்துக்கு அவர் ஆற்றிய சேவை என்றும் நினைவில் இருக்கும் என்று தனது பேச்சில் ஜெயலலிதாவுக்கு புகழ் மகுடம் சூட்டியது தேர்தல் பேச்சாகவே இருந்தது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள மற்ற பெரிய தலைவர்கள் பற்றி எதுவும் பேசாமல் ஜெயலலிதா பற்றி மட்டும் பேசியது தேர்தலை பிரதிபலித்தது. தமிழ்நாட்டைப் போல தேர்தலை சந்திக்கப்போகும் கேரளா பற்றியும் அவரது உரையில் பல கருத்துகள் இடம் பெற்றிருந்தன.

10 மாத குழந்தையை இழந்த பெற்றோர் அந்த குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்த மிகப்பெரிய தியாகத்தை உருக்கத்தோடு குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தினார். அதுபோல கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரே ஒரு வயலில் 570 வகையான நெற்பயிர்கள் சாகுபடி செய்வதைக் எடுத்து சொல்லி கேரளாவுக்கு பெருமை சேர்த்தார்.

இதுமட்டுமல்லாமல் கேரளாவில் பாரதப்புழா நதிக்கரையின் திருநாவாயில் கேரளாவின் கும்பமேளா என்று அழைக்கப்படும் மாமாங்கம் கடந்த 250 ஆண்டுகளாக நடந்த கோலாகலத்தோடும், மகா உன்னதத்தோடும் நடக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி அரசையும் மறைமுகமாக சாடினார். ஆக இந்த மாத மனதின் குரல் உரையில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசியது, இந்த மாநில மக்களின் மனதை தொடுவதையே குறிக்கோளாக கொண்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com