

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த வாரம் வியாழக்கிழமையன்று ஒரே கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில் முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்த இரு மாநிலங்களுமே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவின் குறியில் இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் நேரடியாக பா.ஜனதாவால் ஆளும் கட்சியான தி.மு.க.வை வீழ்த்தமுடியாது என்பதால் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்து 27 இடங்களில் போட்டியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டதால், பா.ஜனதாவின் அடுத்த குறி மேற்கு வங்காளம்தான். மம்தா பானர்ஜியை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜனதா இருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருக்கும் அவர், இப்போது அடுத்த 5 ஆண்டுகளும் அந்த மாநிலத்தில் தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கவேண்டும் என்ற வேட்கையில் தீவிர பிரசாரம் செய்துவருகிறார்.
கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பா.ஜனதா, 2016-ம் ஆண்டு தேர்தலில் 3 இடங்களை மட்டுமே பிடித்தது. ஆனால் 2021-ம் ஆண்டு தேர்தலில் 77 இடங்களில் வென்றது. இந்த தேர்தலில் முதல் கட்டமாக நடந்த 152 தொகுதிகளுமே கடந்த 3 தேர்தல்களிலும் பா.ஜனதாவுக்கு ஓரளவுக்கு சாதகமாக இருந்த தொகுதிகள்தான் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மேற்கு வங்காளத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களில் 75 சதவீதம் பேர் இந்த 152 தொகுதிகளில்தான் வாழ்கிறார்கள். அதுபோல முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களும் இந்த 152 தொகுதிகளில் இருப்பது மம்தாவுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. இப்போது அடுத்த கட்டமாக மீதம் உள்ள 142 தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் தேர்தல் நடக்கிறது.
இந்த தொகுதிகளில் வெற்றி வாகை சூடவேண்டும் என்று மோடி, அமித்ஷா மட்டுமல்லாமல் மம்தா பானர்ஜியும் குறி வைத்துவிட்டார். மேற்கு வங்காளத்தின் அடையாளத்தையே சிதைக்கும் வகையில் இந்த மாநிலத்தை மூன்றாக பிரிக்கவோ அல்லது இந்த மாநிலத்தின் பகுதிகளை அண்டை மாநிலங்களோடு சேர்க்கவோ பா.ஜனதாவின் மத்திய அரசாங்கம் திட்டமிடுகிறது என்று பெரிய குற்றச்சாட்டை மம்தா பானர்ஜி கூறிவருகிறார். இரு கட்சிகளுமே பல வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின் காரணமாக 91 லட்சத்து 36 ஆயிரத்து 464 பேருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் 7 லட்சத்து 49 ஆயிரத்து 945 பெயர்கள் மட்டும் சேர்க்கப்பட்டதையும் குறிப்பிட்டு, ஏராளமானவர்களின் வாக்குரிமையை பா.ஜனதா இழக்கச் செய்துள்ளது என்று ஆக்ரோஷத்தோடு முழங்கி வருகிறார் மம்தா பானர்ஜி.
மோடியும் மேற்கு வங்காளத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு திரட்டி வருகிறார். ஏற்கனவே பா.ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிவிப்புகளோடு பெண்கள் வாக்குகளை வசப்படுத்தும் நோக்கத்தில் அவர்களுக்காகவே இப்போது மேலும் 10 வாக்குறுதிகளையும் அறிவித்துள்ளார். ஆக, மோடியும், மம்தா பானர்ஜியும் மேற்கு வங்காளத்துக்கு குறி வைத்து இருக்கிறார்கள். யாருக்கு இரை விழும் என்பது மே 4-ந்தேதி தெரியும். மம்தா 4-வது முறையாக ஆட்சி அமைப்பாரா?, பா.ஜனதா 20-வது மாநிலமாக அங்கு காவி கொடியை நாட்டப்போகிறதா? என்ற புதிருக்கும் விடை கிடைத்துவிடும்.